சிறுவயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோர்களை இழந்த நாயகன் வெற்றி, வாரணாசியில் வாழ்ந்து வருகிறார். இவரை சாமியார் ஹரிஷ் பெராடி அரவணைத்து ஆன்மீகத்தில் ஈடுபடுத்துகிறார். ஆனால் வெற்றியால் முழுமையாக ஆன்மீகத்தில் ஈடுபட முடியவில்லை. சிறுவயதில் ஏற்பட்ட விபத்தை நினைத்து வருந்துகிறார்.
இதனால் வாரணாசியில் இருந்து சென்னைக்கு கிளம்புகிறார் வெற்றி. செல்லும் வழியில் நாயகி மதுராவை சந்திக்கும் வெற்றி அவருடன் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் ஒன்றாக சென்னைக்கு வந்து கருணாகரன் நடத்தும் லாட்ஜில் ரூம் எடுத்து தங்குகிறார்கள். நாளடைவில் இவர்களுடைய பழக்கம் காதலாக மாறுகிறது.இந்நிலையில் நாயகி மதுரா, பாண்டிச்சேரி செல்கிறார். அங்கு திடீரென்று மர்ம நபர்களால் சிக்கி கொள்கிறார். சென்னையில் இருக்கும் வெற்றி போலீசாரால் கைது செய்யப்படுகிறார்.இறுதியில் மதுராவுக்கு என்ன நடந்தது? வெற்றியின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வெற்றியின் நடிப்பு பெரிதாக எடுபடவில்லை. சாமியார் போல் தாடி மீசை அதிகம் வைத்திருப்பதால் அவரது நடிப்புக்கு பலவீனமாக அமைந்துள்ளது. சாமியார் கெட்டப் அவருக்கு சரியாக பொருந்தவில்லை.நாயகியாக நடித்திருக்கும் ஜெர்மனி பெண் மதுரா அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அனு சித்தாரா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
மன நிம்மதியை இழந்த ஒருவனின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. ஆன்மீகம், காதல், சொத்து பிரச்சனை புத்தகம் என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். கதைக்கு ஏற்ற திரைக்கதை அமையாததால் படம் சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் தெளிவாக சொல்லி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
படத்திற்கு பெரிய பலம் விந்தன் ஸ்டாலினின் ஒளிப்பதிவு. வாரணாசி சென்னை பாண்டிச்சேரி ரிஷிகேஷ் ஆகிய இடங்களை அழகாக படம் பிடித்திருக்கிறார்.மனோஜின் இசையில் பாடல்கள் கவரவில்லை. ஆனால் பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்.3S பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.