அஜித்குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் நன்கு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் தன்னை பன்முக திறமை கொண்ட நடிகையாக தன்னை செதுக்கிக் கொண்டுள்ளார். தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸ் மூலமாக அவர் தனது டைரக்சன் பயணத்தையும் துவங்கியுள்ளார். ஷார்ட்பிளிக்ஸுடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலமாக இந்த வெப் சீரிஸை அவர் தயாரித்திருப்பதுடன் இதற்கான கதையையும் அவரே எழுதியுள்ளார்.
‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து திரையுலகை சேர்ந்தவர்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுவான பார்வையாளர்கள் அனைவருமே இந்த வெப்சீரிஸ் எதைப்பற்றியதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சோனாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக இந்த வெப்சீரிஸில் அவரது வெவ்வேறு வயது காலகட்டங்களில் மூன்று வெவ்வேறு நடிகைகள் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். “இளமை பூக்கும் பதினான்காம் வயதில் நான் ஒரு அழகான வாழ்க்கையை எதிர்நோக்கி கொண்டிருந்தேன், ஆனால் அந்த கரம் என்னை பிடித்தது.. என்னை தள்ளியது.. நான் பேசுவதற்கு யாருமே கிடைக்கவில்லை. நான் ஏதோ உயிர் வாழ்கிறேன்” என்கிற வாசகங்களுடன் நடிகை சோனாவின் 14 வயதான இளம் பருவத்தை இந்த பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் காட்டுகிறது.
‘மத்தகம்’ என்கிற வெப்சீரிஸில் கவுதம் வாசுதேவ் மேனனின் மகளாக நடித்திருந்த நடிகை ஜனனி விஜயகுமார், சோனாவின் இந்த 14 வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
‘ஸ்மோக்’ வெப்சீரிஸ் சோனா ஹைடனால் எழுதி (எனக்குள் இருக்கும் குழந்தை சொல்லச்சொல்ல எழுதப்பட்டது) இயக்கப்பட்டுள்ளதுடன் அவரது யுனிக் புரொடக்சன்ஸ் நிறுவனம் ஷார்ட்பிளிக்ஸுடன் இணைந்து இதை தயாரித்துள்ளது. ஆல்வின் புருனோ இசையமைக்க, வெங்கி தர்ஷன் ஒளிப்பதிவை கையாள, படத்தொகுப்பு பணிகளை அருள் மேற்கொண்டுள்ளார்.
இந்த வெப் சீரிஸ் நன்கு பிரபலமான திறமையான நட்சத்திரங்களை தன்னுள் உள்ளடக்கியுள்ளது. விரைவில் அவர்களை பற்றிய விவரங்களை ஷார்ட்பிளிக்சில் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஸ்மோக்’ வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட இருக்கிறது.