நாயகன் பிரசாந்த் ஒரு இசை கலைஞர். பார்வையற்றவர் இசை அமைத்தால் பாராட்டுவார்கள் என்று நினைத்து கண் பார்வையற்றவர் போல் நடித்து ஊரை ஏமாற்றி வருகிறார். மேலும் லண்டனில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சிக்காக பணம் சேமித்து வருகிறார்.
ஒரு விபத்தில் பிரியா ஆனந்த்தை சந்திக்கும் பிரசாந்த், அவருடன் பழக்கம் ஏற்பட்டு பிரியா ஆனந்த் நடத்தி வரும் பார்- ல் வேலை கொடுக்கிறார். பாரில் இவரது இசையை கண்டு வியந்து பாராட்டும் நடிகர் கார்த்திக், அவரது மனைவி சிம்ரனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டிற்கு வர சொல்கிறார்.
வீட்டிற்கு செல்லும் பிரசாந்த், அங்கு கார்த்திக் இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். பிரசாந்த் பார்வையற்றவர் என்று நினைத்து, கள்ளக்காதலன் சமுத்திரகனியுடன் சேர்ந்து கார்த்திக் சடலத்தை மறைக்கிறார்கள். இதை பிரசாந்த் பார்த்து விடுகிறார்.ஒரு கட்டத்தில் பிரசாந்துக்கு கண் பார்வை இருப்பதை தெரிந்துக் கொண்ட சிம்ரன், அவருக்கு உண்மையாகவே கண் பார்வை இழக்கும் படி செய்து விடுகிறார். சமுத்திரகனி பிரசாந்த்தை கொல்ல நினைக்கிறார்.
இறுதியில் பிரசாந்த்துக்கு கண் பார்வை கிடைத்ததா? சமுத்திரகனியிடம் இருந்து பிரசாந்த் தப்பித்தாரா? பிரசாந்த் லண்டன் செல்லும் கனவு நிறைவேறியதா என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரசாந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கண் பார்வை இருக்கும் போது துறுதுறுவாகவும், கண் பார்வை இல்லாத போது பரிதாப நடிப்பையும் கொடுத்து இருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் சிம்ரன், நடிப்பில் மிரட்டி இருக்கிறார். பாசம், கோபம், சண்டை என்று கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் பிரியா ஆனந்த், அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரகனி கள்ளக்காதலி சிம்ரனிடம் வீரமாகவும், மனைவி வனிதாவிடம் பம்புவதும் என கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் கலகலப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார் கார்த்திக். கே.எஸ்.ரவிகுமார் அனுபவ நடிப்பையும், ஊர்வசியும், யோகி பாபுவும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தியாகராஜன். கதாபாத்திரங்கள் தேர்வு அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இறுதியில் வரும் டண்டனக்கா பாடல் தாளம் போட வைத்திருக்கிறார். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார்.ரவி யாதவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.ஸ்டார் மூவி ப்ரீத்தி தியாகராஜன் நிறுவனம் ” அந்தகன் ” படத்தை தயாரித்துள்ளது.