பூம்பாறை கிராமத்தில் வசித்து வரும் சிவகார்த்திகேயன் புழு, பூச்சிகளுக்கு கூட தீங்கு நினைக்காத மனிதராக இருக்கிறார். இவரின் வயலை வெட்டுக்கிளிகள் முழுவதுமாக சேதமாக்கிவிடுகிறது. இதனால் வாழ்வாதாரம் தேடி சிவகார்த்திகேயன் சென்னை வந்து யோகிபாபு மற்றும் கருணாகரனுடன் இணைந்து வேலை செய்கிறார்.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் வேற்று கிரகத்தில் இருந்து விழுந்த கல்லை வைத்து வில்லன் பூமியில் அதிக துளையிட்டு வாயு ஒன்றை எடுக்க முயற்சிக்கிறார். இதனை அறிந்த ஏலியன் அந்த கல்லை மீட்க, வில்லன் இருக்கும் இடத்திற்கு செல்கிறது. அப்போது கல்லை மீட்டு வெளியே வரும் பொழுது அடிப்பட்டு மயங்கிய நிலையில் சிவகார்த்திகேயன் குழுவிடம் மாட்டிக் கொள்கிறது.
ஒரு கட்டத்தில் ஏலியனின் பிரச்சனையை தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அதற்கு உதவி செய்ய நினைக்கிறார்.
இறுதியில் சிவகார்த்திகேயன் ஏலியனுக்கு உதவி செய்தாரா? ஏலியன் கல்லை எடுத்துக் கொண்டு தன் கிரகத்திற்கு சென்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்ஷனிலும் கலக்கியிருக்கிறார். ஏலியனுடன் சேர்ந்து சண்டையிடும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
யோகிபாபு, கருணாகரன் கூட்டணியில் காமெடியும் கைக்கொடுத்துள்ளது. ஏலியனுக்கு சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இவரின் குரல் குழந்தைகளை கவரும் விதமாக அமைந்துள்ளது.அயலான் படத்தின் முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அதிரடி காட்டியுள்ளார் இயக்குனர் ரவிகுமார். கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வெட்டுகிளிகள் வரும் காட்சிகள், ஏலியன் வரும் காட்சிகள் என படம் முழுவதும் கிராபிக்ஸால் மிரட்டியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணியில் இசையில் ஸ்கோர் செய்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளித்துள்ளது.