பைரி பாகம் 1 – விமர்சனம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் பகுதியை சேர்ந்த செய்யது மஜித், புறா பந்தயத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். இவரது குடும்பம் புறா பந்தையத்தால் பல இழப்புகளை சந்தித்ததால் தாய் விஜி சேகர் புறா வளர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து படிப்பில் ஆர்வம் காட்ட சொல்கிறார். ஆனால், செய்யது மஜித் தாயாரின் எதிர்ப்பை மீறி புறா வளர்க்க ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில் புறா பந்தையம் ஆரம்பிக்கிறது. இதில் கலந்துக் கொள்ளும் செய்யது மஜித், தாதாவாக இருக்கும் வினு லாரன்ஸ் புறா பந்தையத்தை ஏமாற்றுவதை அறிந்து அவரிடம் சண்டைக்கு போகிறார். இது மிகப்பெரிய மோதலாக மாறுகிறது.

இறுதியில் செய்யது மஜித் புறா பந்தயத்தில் வெற்றி பெற்றாரா? செய்யது மஜித் – வினு லாரன்ஸ் இடையேயான மோதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செய்யது மஜித், புதுமுக நடிகர் போல் இல்லாமல் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கோபம், காதல், நட்பு, பந்தயத்தில் வெற்றி பெற முயற்சிப்பது என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் மேக்னா எலனுக்கு பெரியதாக வேலை இல்லை. மற்றொரு நாயகியாக வரும் சரண்யா ரவிச்சந்திரன், செய்யது மீது ஒருதலை காதலாக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார்.

தாயாக நடித்து இருக்கும் விஜி சேகர் நடிப்பில் பளிச்சிடுகிறார். ஒரு தாயின் பாசத்தை உணர வைத்து இருக்கிறார். இரு தரப்பினருக்கும் இடையே மோதலை தடுக்கும் பண்ணையாராக வரும் ரமேஷ், மனதில் இடம் பிடித்துள்ளார். வினு லாரன்ஸ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

வில்லுப்பாட்டு பின்னணியில் குமரி மாவட்டத்தில் இன்றும் நடைபெற்றுக்கொடிருக்கும் புறா பந்தய கதையை குமரி தமிழில் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜான் கிளாடி.படத்தை இயக்கிய தோடு செய்யது மஜித்தின் உயிர் நண்பனாகவும் புறா பந்தய வீரராக காமெடியும், உயிருக்கு பயந்து எமோஷனையும் வெளிப்படுத்தி இருக்கிறார் ஜான் கிளாடி. பலருக்கும் தெரியாத புறா வளர்த்தல், பந்தயம், அதில் இருக்கும் சூட்சமம் ஆகியவற்றை டீடைலாக சொல்லி இருக்கிறார். இவரின் தந்தையாக வரும் ராஜன் கிளைமாக்சில் நெகிழ வைத்துள்ளார். அனைத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பது சிறப்பு. அதுபோல் மக்களின் இயல்பு மாறாமல் யதார்த்தமாக வசனம் பேச வைத்திருப்பதும் சிறப்பு.அருண் ராஜ் இசையில் பாடல்கள் பெரியதாக எடுபடவில்லை. ஆனால், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.வசந்தகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். புறாக்களை அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top