நாயகன் சதீஸ் வீடியோ கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இந்த துறையிலேயே வேலை தேடி வரும் சதீஸ், ஒரு நாள் தன் வீட்டிற்கு பின்னால் இருக்கும் கிணற்றில் இருந்து டிரீம் கேட்சர் என்னும் சூனியம் வைக்கப்பட்ட பொருளில் ஒரு இறகை பறித்து விடுகிறார். இதிலிருந்து அவர் எப்போ தூங்கினாலும் கனவு உலகத்திற்கு சென்று விடுகிறார்.
அங்கு பெரிய பங்களாவில் ஒரு பேய் அவரை மிரட்டுகிறது. சில நாட்களில் இவருடன் தந்தை விடிவி கணேஷ், தாய் சரண்யா, மாமா நமோ நாராயணன், டாக்டர் ரெடின் கிங்ஸ்லி, தாதா ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் கனவு உலகத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
இறுதியில் சதீஸ் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கனவு உலகத்தில் இருந்து தப்பித்தார்களா? கனவு உலகத்தில் மிரட்டும் பேய் யார்? எதற்காக மிரட்டுகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சதீஸ், வழக்கமான காமெடி நடிப்பை தாண்டி சீரியசாக நடித்து இருக்கிறார். பங்களாவில் பேய்க்கு பயப்படும் காட்சிகளில் கவர்ந்து இருக்கிறார். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ரெஜினா. இவரது உடை, நடை அனைத்தும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன், நாசர் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த் ராஜ் காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். அழகான பேயாக மனதில் பதிந்திருக்கிறார் எல்லி.
வழக்கமான பேய் படங்களுக்கு உண்டான பங்களா, பிளாஷ்பேக் என அதே டெம்ப்ளேட்டில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் செல்வின் ராஜ். காமெடி காட்சிகள் ஒரு சில இடங்களில் ஒர்க்கவுட் ஆகவில்லை. முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி சுவாரஸ்யம் இல்லாமலும் திரைக்கதை நகர்கிறது. தூங்காமல் இருக்க அனைவரும் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது.
படத்திற்கு பெரிய பலம் யுவன் சங்கர் ராஜாவின் இசை. பேய் படத்திற்கு ஏற்ப பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். யுவாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.