டெவில் – விமர்சனம்

நாயகன் விதார்த்தும், நாயகி பூர்ணாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். வக்கீலாக இருக்கும் வித்தார்த்துக்கு தன்னுடன் வேலை பார்க்கும் சுபஶ்ரீயுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்கிறார். இது ஒரு கட்டத்தில் பூர்ணாவிற்கு தெரிய வருகிறது. மன வருத்தத்தில் விதார்த்துடன் சண்டை போட்டு காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திரிகன் பைக் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இதில் திரிகனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. ஆதரவற்று இருக்கும் திரிகனுக்கு வலி மற்றும் துன்பத்தை ஏற்படுத்திய பூர்ணாவுக்கு குற்ற உணர்வு மாறுகிறது. இதனால் திரிகனை அடிக்கடி சந்திக்கிறார். இவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது. இந்நிலையில் நாயகன் விதார்த் மனம் திருந்தி பூர்ணாவை தேடி வருகிறார்.

இறுதியில் நாயகி பூர்ணா கணவர் விதார்த்துடன் சேர்ந்து வாழ்ந்தாரா? திரிகனுடன் ஏற்பட்ட காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விதார்த், துரோகம் செய்யும் கணவன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். பூர்ணாவிடம் நல்லவன் போல் இருப்பது, சுபஶ்ரீயுடன் உல்லாசமாக இருப்பது, துரோகத்தை உணர்ந்து வருந்துவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகி பூர்ணா யாரும் எதிர்பார்த்திடாத அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். கணவனை நினைத்து வருந்தும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார்.

திரிகன் அழகாக வந்து ஸ்மார்ட்டாக நடித்து இருக்கிறார். மற்றோரு நாயகி சுப ஶ்ரீ கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

காதல், துரோகம், கள்ளத் தொடர்பு, பாசம் என படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆதித்யா. முதல் பாதி காதல் ரொமான்ஸ் என திரைக்கதை நகர்கிறது. இரண்டாம் பாதி சென்டிமென்ட் திரில்லர் என திரைக்கதையை நகர்த்திருக்கிறார். திரையில் நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு கதையையும் நகர்த்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. இசையை கற்று ஒரு படத்திற்கு இசையமைப்பாளராக மாறிய மிஷ்கினுக்கு பெரிய கைத்தட்டல். படத்தின் பாடல்கள் அனைத்தும் மென்மையாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top