மகாபாரதப் போர் நடந்து முடிந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடப்பதாக கல்கியின் கதை அமைக்கப்பட்டுள்ளது. உலகம் பல அழிவுகளை சந்தித்தப் பின் கடைசியாக மிஞ்சியிருக்கும் நகரம் காசி. மக்கள் அனைவரையும் கொடுங்கோள் ஆட்சி நடத்தி வாழ்ந்து வருகிறார் கமல்ஹாசன். ஒருபக்கம் மக்கள் பஞ்சத்திலும் பசியிலும் வாழ்கிறார்கள்.
மறுபக்கம் பணம் மற்றும் வசதியுள்ள மக்கள் மட்டும் செல்வ செழிப்பான எல்லா வசதிகளும் உடைய `காம்பிளக்ஸ்’ என்ற தனி உலகை உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர். இந்த காம்பிளக்ஸ் உலகில் பணம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி. காசியில் வாழ்ந்து வரும் நாயகன் பிரபாஸ், எப்படியாவது பணத்தை சேர்த்து காம்பிளக்ஸ் உலகில் நுழைந்து விடவேண்டும் என்று திட்டம் போடுகிறார். இதற்காக அவன் எந்த எல்லைக்கும் சென்று பணம் சம்பாதிப்பதற்கு தயாராக இருக்கிறார்.
இதற்கிடையே தன்னிடம் அடிமையாக உள்ள பெண்களின் கருவில் இருக்கும் சீரத்தை எடுக்கிறார் கமல். அவர் தேடும் சீரம் தீபிகா படுகோனேவின் கருவில் இருப்பதை அறியும் கமல் அந்த சீரத்தை எடுக்க முயற்சிக்கிறார். அப்போது அவர்களிடமிருந்து தீபிகா படுகோனே தப்பிக்கிறார்.தீபிகா படுகோனை கண்டுப்பிடித்து ஒப்படைத்தால் காம்ப்ளெக்ஸ் நகரத்தில் மிகப்பெரிய தொகைத்தரப்படும் என அறிவித்ததால், பிரபாஸ் தீபிகா படுகோனை பிடித்து அவரது குறிக்கோளை அடைய நினைக்கிறார்.இறுதியில் தீபிகா படுகோனேவை பிடித்து கொடுத்து காம்ப்ளெக்ஸ் உலகத்திற்கு பிரபாஸ் சென்றாரா? தீபிகா படுகோனேவின் கருவில் இருக்கும் சீரத்தை கமல் அடைய நினைக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
பிரபாஸ் வழக்கம் போல் அவரது மாஸ் கமெர்ஷியல் ஆக்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி உள்ளார். அமிதாப் பச்சன் வரும் காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. இந்த வயதிலும் அமிதாப் பச்சனின் நடிப்பு வியக்க வைத்துள்ளது. சிறிய நேரம் வந்தாலும் மக்கள் மனதில் பதிந்துள்ளார் கமல்ஹாசன். தீபிகா படுகோன் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார். தன் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏன் இவ்வளவு ஆபத்து என்று தெரியாமல் பதறும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.இதிகாசக் கதையை சைன்ஸ் ஃபிக்ஷன் வகைமையோடு இணைத்து நம்பகத்தன்மையான ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். மேட்மேக்ஸ், பிளாக் பாந்தர் போன்ற ஹாலிவுட் படத்தின் சாயல்களை இப்படத்தில் காணமுடிகிறது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், மக்கள் வாழ்விடமாக இருக்கும் நகரத்தின் வடிவமைப்பு மக்களை பிரமிக்கும் வகையில் இருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.மகாபாரதத்தில் கிருஷ்ணன் அஸ்வத்தாமாவிற்கு சாகா வரத்தை தண்டனையாக கொடுக்கிறார். கலியுகத்தில் கிருஷ்ணன் மீண்டும் அவதாரம் எடுக்கும் போது அவரை காப்பாற்றினால் மட்டுமே இந்த சாபத்தில் இருந்து விடுபட முடியும் என்ற மகாபாரத கதையை படமாக்கி இருக்கிறார்.படத்தில் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், ராஜமௌலி உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் கவுரவ தோற்றத்தில் வருகின்றனர். ஆனால் அது எந்த அளவுக்கு பயனளிக்கவில்லை.
படத்தின் முதல் பாதி கொஞ்சம் தடுமாற்றங்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஆனால் இந்த தடுமாற்றங்களை எல்லாம் இரண்டாம் பாதியில் சரிக்கட்டியுள்ளார் இயக்குனர்.படத்தின் ப்ரோடக்ஷன் டிசைனர் நிதின் ஜிகானி மற்றும் ஒளிப்பதிவாளர் டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் இருவரும் தங்கள் அசாத்திய உழைப்பால் இயக்குநர் நாக் அஸ்வினின் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது.அஸ்வினி தட் சார்பாக விஜெயந்தி நெட்வொர்க் நிறுவனம் கல்கி 2898 ஏடி திரைப்படத்தை தயாரித்துள்ளது.