கலை , நேத்ரா, நதி , கீதா ஆகிய நான்கு பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது கண்ணகி. வெவ்வேறு பொருளாதார சூழலைச் சேர்ந்த இந்தப் பெண்கள் தங்களது வாழ்க்கையில் வெவ்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். கட்டாயத்தின் பேரில் திருமணம். எதிர்பாராத கருத்தரிப்பு, விவாகரத்து, திருமணம் செய்துகொள்ளாததால் எதிர்கொள்ளும் அவதூறுகள் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இவர்கள் தங்களது விருப்பத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் சமூகத்துடன் போராடுகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை இருந்தாலும் இந்த நான்கு பெண்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமையை இயக்குனர் ஒரு சஸ்பென்சாக வைத்திருக்கிறார் படத்தில்.
அடுத்தபடியாக இந்தப் படத்தை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும் மன ரீதியாக சொல்லப்போனால் இப்படத்தை தயாரித்திருக்கும் நிறுவனத்திற்கு பெரிய சபாஷ் சொல்லலாம்.
நான்கு கதாபாத்திரங்களை மிகவும் யதார்த்தமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் யஷ்வந்த் கிஷோர். பல படங்களில் நடித்த அனுபவத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் நாயகி அம்மு அபிராமி. தனது தந்தை இழப்பை தாங்க முடியாமல் அழும் காட்சியில் நம்மையும் அழ வைக்கும் அளவிற்கு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அம்மு அபிராமி.
அப்பாவாக வரும் மயில்சாமி நம்மை விட்டு மறைந்தாலும் நம் மனதிற்குள் நிற்கிறார் இந்த கதாபாத்திரமாக.அம்மாவாக வரும் மௌனிகா நிறைய வீடுகளில் இது மாதிரி அம்மாக்களை பார்ப்பது போன்று ஒரு பழைய நினைவுகள் நம் மனதிற்கு வருகிறது.
ஒரு திமிரான, தெனவட்டான எவருக்கும் அடங்காத பெண்ணாக நடித்து கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஷாலின்.
பல விதமான சோகங்களை மனதிற்குள் தாங்கிக் கொண்டும் 4 மாத சிசுவை வயிற்றில் ஏந்திக் கொண்டும் ஒரு இறுக்கமான மனநிலையில் நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன் அக்கதாபாத்திரமாகவே கண்களை விட்டு அகலாமல் நடித்துச் சென்றிருக்கிறார்.
பல மலையாள படங்களில் இசை அமைத்திருக்கும் சான் ரகுமானின் இசை மனதை வருடுகிறது. அதிலும் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள காட்சிகளில் மழை வரும் போது இவரது இசையும் வருகிறது நம் காதில்.
படம் முழுவதும் வரும் நான்கு பெண்களையும் எப்படி இணைத்து படத்தை முடிப்பார் இயக்குனர் என்ற கேள்வி நம் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்க படமும் இறுதிக்காட்சியை எட்ட நம் இருக்கையை விட்டு எழுந்து இறுதிக் காட்சியை பார்த்தவுடன் கை தட்ட தான் தோன்றுகிறது அவ்வளவு அழகாக இணைத்து இருக்கிறார் இயக்குனர்.
படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமே படத்தின் வசனங்கள் தான்.
பொதுவாக தியேட்டருக்கு சென்று படம் பார்த்தால் ஆண்கள் அதிகமாக கைதட்டுவதை பார்க்கலாம் இந்த டிசம்பர் 15 முதல் பெண்கள் எழுந்து நின்று கைதட்டுவார்கள் இத்திரைப்படத்திற்கு.
இப்படி ஒரு திரைப்படத்தை எடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும் இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ளலாம்.
மொத்தத்தில் இந்த ‘கண்ணகி’ அனைவரையும் கவரும்.