கடவுள் நம்பிக்கை இல்லாத நாயகன் விஜய் தேவரகொண்டா, அரசு வேலை கிடைத்து காஷ்மீருக்கு செல்கிறார். அங்கு நாயகி சமந்தாவை சந்திக்கும் விஜய் தேவரகொண்டா, முதல் பார்வையிலேயே காதல் வயப்படுகிறார். சமந்தாவை துரத்தி துரத்தி காதல் செய்யும் விஜய் தேவரகொண்டா, ஒரு கட்டத்தில் சமந்தாவை காதலில் விழ வைக்கிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில், திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். ஆனால், விஜய் தேவரகொண்டாவின் தந்தை அறிவியலை நம்புகிறவர்.
சமந்தாவின் தந்தை சொற்பொழிவாளர். எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவர்களின் எதிர்ப்பை மீறி விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இறுதியில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரின் திருமண வாழ்க்கை என்ன ஆனது? பெற்றோர்கள் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். காதல், கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சமந்தா ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்து இருக்கிறார். காதலிக்கும் போது புத்துணர்ச்சியையும் விஜய் தேவரகொண்டாவுடன் சண்டை போட்டவுடன் பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். ஜெயராம் மற்றும் ரோகிணி இருவரும் திருமண வாழ்க்கையை புரிந்துக் கொண்ட நல்ல தம்பதியினராக நடித்து இருக்கிறார்கள். சமந்தாவின் பாட்டியாக நடித்திருக்கும் லட்சுமி, அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். சச்சின் கேதர் மற்றும் முரளி சர்மா இருவரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வாணா. முதல் பாதி காதல், இரண்டாம் பாதி கலகலப்பு, சென்டிமென்ட் என திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு உள்ள காதல், திருமணத்திற்கு பிறகு உள்ள காதல், அதனால் ஏற்படும் பிரச்சனையை சொல்லி இருக்கிறார். அதோடு நாத்திகன், ஆத்திகன் ஆகியோரில் யார் பெரியவர் என்ற ஈகோவை சொல்லி இருக்கிறார். ஹசம் அப்துல் வாஹாப் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான நிலையில், முரளி ஒளிப்பதிவோடு சேர்ந்து பார்க்கும் போது கலர்புல்லாக இருக்கிறது.