சிறு கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்ற ரஜினி அங்கு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார். இவரது மகன் விக்ராந்திற்கும் ரஜினியின் நண்பரின் மகன் விஷ்ணு விஷாலும் சிறு வயதில் இருந்தே எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.விஷ்ணு விஷால் த்ரீ ஸ்டார் என்ற கிரிக்கெட் டீமில் விளையாடி வெற்றி பெற்று வருகிறார். ஆனால் ஒரு சில காரணங்களால் விஷ்ணு விஷால் இன்னொரு டீமில் சேர்கிறார். அதன் பின்னர் த்ரீ ஸ்டார் டீம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் த்ரீ ஸ்டார் அணி வெற்றி பெறுவதற்காக கபில் தேவிடம் பயிற்சி பெற்ற விக்ராந்தை தங்கள் டீமில் சேர்க்கின்றனர்.
விக்ராந்த் விளையாடிய முதல் விளையாட்டில் த்ரீ ஸ்டார் அணி மீண்டும் தோல்வியை சந்திக்கிறது. இதனால் விஷ்ணு விஷால் அணியினர் இவரை கேலி செய்கின்றனர். அதன்பின்னர் விக்ராந்தின் த்ரீ ஸ்டார் அணி வெற்றி பெறுகிறது. ஆனால் இதனை விஷ்ணு விஷால் அணி ஏற்க மறுக்கிறார்கள். இந்த சண்டையை ஒரு சிலர் பயன்படுத்தி பெரிய பிரச்சனையாக்குகின்றனர்.இறுதியில் இந்த பிரச்சனை என்ன ஆனது? விஷ்ணு விஷால், விக்ராந்தின் வெற்றியை ஒப்புக் கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் ரஜினி படத்தை தாங்கி பிடித்துள்ளார். இவரின் என்ட்ரிக்கு பிறகு படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ரஜினிக்கு ஒரு மாஸ் இன்ட்ரோ காட்சி இந்த படத்தில் அமைந்துள்ளது.
விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் ஆகியோர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். கபில் தேவ் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்துள்ளார். தன்யா பால கிருஷ்ணா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கவர்கிறார்.தற்போது சமூகத்தில் நிலவி வரும் மத பிரச்சனையை மையமாக வைத்து கதையை இயக்கி இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டலாம். படத்தில் பல இடங்களில் எமோஷனல் காட்சிகள் நன்றாக கைகொடுத்துள்ளன. மதநல்லிணகத்தை பேசுகிறேன் என்று வசனத்தை திணிக்காமல் தேவையான காட்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அதிலும் ‘ஜலாலி’ பாடல் தாளம் போட வைக்கிறது.தினேஷ் ஆக்ஷன் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு அருமை.சத்யா காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.