கோயம்புத்தூரில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் விதார்த், மனைவி சுவேதா டோரத்தியுடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இரவில், ஒருவர் செல்லும் வழியில் எல்லாம் பார்ப்பவர்களை அடிக்கிறார். தடுக்க சென்ற போலீஸ்களையும் அடிக்கிறார். இந்த தகவல் விதார்த் கவனத்திற்கு செல்கிறது.அந்த சைக்கோ கொலையாளியை பிடிக்க விதார்த் முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் விதார்த் மனைவி சுவேதா டோரத்தி, அந்த சைக்கோ கொலையாளிடம் மாட்டிக் கொள்கிறார்.இறுதியில் விதார்த், அந்த சைக்கோ கொலையாளியிடம் இருந்து மனைவியை காப்பாற்றினாரா? சைக்கோ கொலையாளி யார்? எதற்காக பார்ப்பவர்களை எல்லாரையும் அடிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விதார்த் போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சைக்கோ கொலையாளி இடம் மனைவியைக் காப்பாற்ற போராடுவது, மனைவி மீது பாசமாக இருப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகி சுவேதா டோரத்தி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு அதிர்ச்சியான சத்தம் கேட்டால் தூங்கும் சுபாவமுடைய கதாபாத்திரம். அதை ஓரளவிற்கு உணர்ந்து நடித்து இருக்கிறார். விதார்த்துடன் ரொமான்ஸ் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
விபின், சஹானா இருவரும் அழகான காதல் ஜோடியாக வந்து திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் மனதில் நிற்கவில்லை.ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாஜி சலீம். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்த முயற்சி செய்து இருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் சுவாரஸ்யம் இருந்திருக்கலாம். அதுபோல் லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.பிரவீன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை, கதைக்கு ஏற்றார் போல் கொடுத்து இருக்கிறார்.ஞான சௌந்தர் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.எம் சினிமா ப்ரொடக்ஷன் நிறுவனம் லாந்தர் திரைப்படத்தை தயாரித்துள்ளது.