விபத்தில் பெற்றோரை இழந்ததுடன் தாய்மை அடையும் பாக்கியத்தையும் இழக்கிறார் மாலதி. இதனால் அவரது திருமண வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதையொட்டி திருமண ஆசையை வெறுத்து திருமணம் ஆகாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்கிறார் மாலதி.
அவரது எண்ணத்தை தனது நண்பரின் தாயார் ரேகாவிடம் எடுத்து சொல்கிறார். ஏற்கனவே திருமணமாகி கணவர் விட்டுச் சென்ற நிலையில் சிங்கிள் தாயாராக வாழ்ந்து வரும் ரேகா, மாலதியின் நிலையைக் கண்டு கண்கலங்கி கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்கிறார்.
இறுதியில் 50 வயதான ரேகா தாய்மை அடைந்து குழந்தை பெற்றுக் கொண்டாரா? ரேகாவிற்கு ஏற்பட்ட சவால்களே என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் ஒரு காலகட்டத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த ரேகா 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் கதை நாயகியாக தாய்மை அடையும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தனது பக்கம் கவர்ந்திழுப்பது மட்டுமின்றி படம் முழுவதும் ஒரு அழுத்தமான நடிப்பின்றி காமெடி கலந்து படத்தின் கதையை ரசிக்க வைத்துள்ளார்.
இயக்குனர், கதாநாயகி, தயாரிப்பாளர் என்ற மூன்று முகங்களுடன் மாலதி தாய்மையின் மகத்துவத்தையும் குழந்தைக்காக ஏங்கும் பல பெண்களின் குமுறல்களையும் படமாக வெளிக்கொண்டு வந்துள்ளார். கதையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கூறியிருக்கலாம்.
பெண்களின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தின் மொத்த கதைக்கு ரேகாவுடன் சேர்ந்து நடித்துள்ள மாலதி நடிப்பு குழந்தைகளுக்காக ஏங்கும் பெற்றோரின் பிரதிபலிப்பாக உள்ளது.
ரேகாவின் மகனாக வரும் எழில், தாய்பாசத்திலும் காதலியிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் யதார்த்தத்துடன் நடித்துள்ளார். படத்திற்கு ஒரு காமெடியாக இருப்பதுடன் அழுத்தமான கதைகளத்துடன் வி.ஜே.ஆஷிக் வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகிறது.
ஏ.ஆர். ரெஹானா இசையில் பாடல்கள் மற்றும் வரிகள் கவனிக்க வைக்கும் வகையில் உள்ளது. ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது.