தபால்காரராக பணிபுரிந்து வரும் எம்.எஸ்.பாஸ்கருக்கு உயரம் குறைவான வெங்கட் என்ற மகனும் இவானா என்ற மகளும் உள்ளனர். இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வரும் நிலையில் பேராசிரியர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் இவானா சென்னைக்கு சென்று விடுகிறார்.
மகள் இவானா காதல் திருமணம் செய்து கொண்டதால் அவமானம் தாங்காமல் எம்.எஸ்.பாஸ்கரும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் தனிமை அடைந்த வெங்கட் செங்குட்டுவன் தனது அக்காவை தேடி சென்னை செல்கிறார். சென்னையில் பல இளம் பெண்கள் கடத்தப்பட்டு மர்மமாக கொலை செய்யப்படுகின்றனர்.
இதையடுத்து ஒருபுறம் போலீஸ் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் இன்னொருபுறம் வெங்கட் செங்குட்டுவன் தனியாக புலன் விசாரணை செய்து வருகிறார்.
இறுதியில் மர்ம கொலையாளிகளை வெங்கட் கண்டுபிடித்தாரா? அதனால் அவர் பட்ட அவமானங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
சமீபத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது அனுபவ நடிப்பை தந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். இந்தப் படத்திலும் குள்ளமான தனது மகனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுப்பதுடன் மகள் இவானா திருமணம் செய்து சென்ற நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து பரிதாபத்தை ஏற்படுத்துகிறார்.
அக்காவாக வரும் இவானா, காதலியாக சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் ஆராத்யா ஆகியோர் ரசிக்க வைக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக சில காட்சிகளே வந்தாலும் கவனத்தை ஈர்த்துள்ளார். யாரும் எதிர்பார்த்திராத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வெங்கட் செங்குட்டுவன்.
உயரம் ஒரு தடையல்ல மற்றும் உருவ கேலியை மையமாகக் கொண்டு தரமான ஒரு படமாக மதிமாறன் படத்தை திரைக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன். கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நல்லதொரு நடிப்பை கொடுத்ததுடன் சமூகத்தில் உயரத்தில் குள்ளமாக இருப்பவர்களுக்கு முன்னுதாரணமாக ஒரு விழிப்புணர்வையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளார்.
படத்தின் கதையை மொத்தமாக சுமந்து ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சரியான இடத்தில் கொண்டு சேர்த்துள்ளார். சில காட்சிகளில் நம்பகத்தன்மை குறைவாக அமைந்துள்ளது.