சமுத்திரகனி – அபிராமி தம்பதிகளுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கிறது. இதனால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். தங்களின் மொத்த அன்பையும் அந்த குழந்தைக்கு கொடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த நேரத்தில் குழந்தையை தத்து கொடுத்த தாய் அந்த குழந்தை திரும்ப கேட்கிறார். சமுத்திரகனி – அபிராமி தம்பதி குழந்தையை தர மறுக்கவே ’சொல்லாததும் உண்மை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் குழந்தையை திரும்ப வாங்கி தருமாறு தத்துக் கொடுத்த தாய் கேட்கிறார். இந்த பிரச்சினை நீதிமன்றம் வரை செல்கிறது. இறுதியில் இந்த வழக்கு என்ன ஆனது? சமுத்திரகனி – அபிராமி தம்பதி குழந்தையை திரும்ப பெற்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சமுத்திரகனி தன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குழந்தை கிடைத்த மகிழ்ச்சி, அதை பிரிந்து விடுவோமோ என்ற பயம் என உணர்சிகளை தழும்பவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். பல வருடங்களுக்கு பிறகு திரையில் தோன்றியுள்ள அபிராமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். மிஷ்கின், ரோபோ சங்கர், அனுபமா குமார் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குழந்தை இல்லாததில் உள்ள வழியும், தத்தெடுத்து வளர்ப்பதில் உள்ள நடைமுறை சிக்கலையும் திரைக்கதையாக அமைத்துள்ளார். இயக்குனர் லஷ்மி ராமகிருஷ்ணன். வளர்ப்பு தாய்க்கும், உயிரியல் தாய்க்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மிகவும் அழகாக திரையில் காண்பித்துள்ளார். சில இடங்களில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பெரிய திரையில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.