சித்தார்த்தின் அண்ணன் இறந்துவிடவே அவரது மகளை தன் மகள் போல் வளர்த்து வருகிறார் சித்தார்த். இவர் வேலை செய்யும் இடத்தில் இவரது முன்னாள் காதலி இவருக்கு கீழ் வேலைக்கு சேர்கிறார். இவர்களுக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இருவரும் மீண்டும் காதலித்து வருகின்றனர். இப்படி இவர்களது வாழ்க்கை சுமூகமாக போய் கொண்டிருக்கிறது. ஒரு நாள் சித்தார்த் மகளின் தோழி, அவளை ஒரு காட்டுக்கு தனியாக போகலாம் என்று அழைக்கிறாள். ஆனால், சித்தார்த் மகள் பயத்தினாள் போக மறுத்துவிடுகிறாள்.தோழி மட்டும் அந்த இடத்திற்கு தனியாக போக அடுத்த நாளிலிருந்து பேய் அறைந்தது போல் இருக்கிறாள். இதை பார்த்த சித்தார்த் அந்த குழந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு வீட்டில் விட்டு செல்கிறார். அடுத்த நாள் அந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த விஷயம் போலீஸ் பிரச்சினையாகி சித்தார்த்தை போலீசார் கைது செய்கிறார்கள். இறுதியில் அந்த குழந்தைக்கு என்ன ஆனது? சித்தார்த்தை போலீஸ் ஏன் கைது செய்தனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.சித்தார்த் வழக்கம் போல் தனது முழு நடிப்பையும் கொடுத்து திரையை ஆக்கிரமித்துள்ளார். ஒரு எளிமையான குடும்பத்து இளைஞனாக தோன்றியுள்ளார். அன்பு, தேடல், பதட்டம் என ஒவ்வொரு முகபாவனையும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், குழந்தை சஹாஸ்ரா ஸ்ரீ ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.ஒரு சித்தப்பாவிற்கும் மகளுக்கும் இடையில் உள்ள பாசத்தையும், இன்றைய காலத்திற்கு தேவையான கருத்தையும் மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அருண் குமார். நடிகர்களிடம் சிறப்பாக வேலை வாங்கியுள்ளார். திரைக்கதையை ரசிக்கும் படியாக அமைத்துள்ளார்.திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்.பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவில் கலக்கியுள்ளார். சித்தப்பாவிற்கும் மகளுக்கு இடையேயான உறவை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.