ஆங்கிலேயர்களின் காலத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் இடம் கொத்தா. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அங்கு குடிபெயர்கிறார்கள். குற்றவாளிகளை தண்டிக்கும் இடமாக இருந்த கொத்தா குற்றவாளிகளின் சாம்ராஜ்யமாக மாறுகிறது. அந்த இடம் போதைப் பொருள் வியாபாரம் செய்யும் சபீர் என்கிற ரவுடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கொத்தாவிற்கு புதிய காவல் அதிகாரியாக பிரசன்னா வருகிறார். சபீர் செய்யும் அராஜகங்களை எல்லாம் தெரிந்துகொள்ளும் பிரசன்னா, அவன் பயப்படும் ஒரே ஆளான துல்கர் சல்மானை பற்றித் தெரிந்து கொள்கிறார். ஊரை விட்டே போன துல்கர் சல்மானை மீண்டும் கொத்தாவிற்கு வரவழைக்க பிரசன்னா திட்டம் போடுகிறார். இறுதியில் ஊரை விட்டு போன துல்கர் சல்மான் கொத்தாவிற்கு வந்தாரா? கொத்தாவை விட்டு துல்கர் செல்ல காரணம் என்ன? துல்கரை கண்டு சபீர் பயப்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் ஆக்ஷன் ஹீரோவாக படம் முழுக்க வலம் வருகிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளில் கவர்ந்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் சபீர். மற்ற கதாபாத்திரங்கள் மனதை கவரவில்லை. ரவுடிசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி. விறுவிறுப்பாக தொடங்கும் திரைக்கதை போக போக குறைந்து விடுகிறது. அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும்படி திரைக்கதை அமைத்து இருப்பது படத்திற்கு பலவீனம். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இசையில் ரித்திகா சிங் ஆடும் பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். அதுபோல் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவையும் பாராட்டலாம். 90-களில் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.