தேவநாடு என்னும் மலைவாழ் கிராமத்தில் தந்தை சிவாஜி மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் தர்ஷன். இவரது தங்கை தற்கொலை முயற்சி செய்கிறார். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் இவரது தங்கை இறக்கிறார்.
இந்த ஊரில் மருத்துவமனை இருந்தும் டாக்டர்கள் இல்லாததால் பல உயிர்கள் இறக்க நேரிடுகிறது. நாயகன் தர்ஷன் தனது ஊர் மக்களுடன் சேர்ந்து கலெக்டர் அருள்தாசிடம் டாக்டர் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அவரும் டாக்டரை வர வைக்க உத்தரவு விடுகிறார். ஆனால், அந்த டாக்டரை நன்றாக மரியாதை கொடுத்து ஊரை விட்டு போகாதபடி பார்த்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
அதன்படி டாக்டராக அந்த ஊருக்கு மகிமா நம்பியார் வருகிறார். ஒரு வாரத்தில் ஊரை விட்டு சென்று விடுவதாக அவர் ஊர் மக்களிடம் சொல்ல, மக்களோ அவரை ஊரை விட்டு போகாத படி பல விஷயங்கள் செய்கிறார்கள்.
இறுதியில் டாக்டர் மகிமா நம்பியார் அந்த ஊரிலேயே தங்கி மக்களுக்கு சிகிச்சை அளித்தாரா? ஊர் மக்கள் மகிமா நம்பியாரை எப்படி பார்த்துக் கொண்டார்கள்? தர்ஷனின் தங்கை தற்கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன், தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். தங்கையை தோளில் தூக்கி கொண்டு ஓடும் போதும், தந்தை நினைத்து அழும் போதும், மகிமாவை ஊரில் இருக்க வைக்க செய்யும் முயற்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மகிமா, அழகான டாக்டராக மனதில் பதிகிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக மக்களின் முயற்சியை கண்டு வருந்தும் காட்சிகளில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.
தர்ஷனின் தந்தையாக வரும் சிவாஜி, ஊர் தலைவராக வரும் சிங்கம் புலி ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். தர்ஷனின் நண்பராக வருபவர், கிடைக்கும் இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
மலைவாழ் மக்களின் வாழ்வியலை அழகாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சரவணன். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். படம் ஆரம்பித்து சில நேரத்திலேயே அந்த கிராமத்திற்கே நம்மளை அழைத்து சென்று விடுகிறார். குறிப்பாக கிளைமாக்சில் நாம் எதிர் பார்க்கும் சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்தை படமாக்கி இருப்பது சிறப்பு.
சத்யா இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை திரைக்கதையோடு அழகாக பயணித்து இருக்கிறது. சக்திவேலின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மலைகளின் அழகை சிறப்பாக படம் பிடித்து காண்பித்து இருக்கிறார்.