நாயகன் நவீன் கோயம்புத்தூரில் உள்ள துப்பறியும் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கேசுகளை சாதுரியமாக கையாண்டு உண்மைகளை கண்டு பிடிக்கிறார். ஒருநாள் தேனி முருகன், தன்னுடைய மகள் அஞ்சனா பாபு கல்லூரி நூலகத்தில் உள்ள நபரை காதலிக்கிறார். அவரை பற்றி விசாரித்து தரும்படி நவீனிடம் கேட்கிறார்.
இந்நிலையில் நள்ளிரவு ஒருநாள் நவீன் காரில் சென்று கொண்டிருக்கும் போது, விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழக்கிறார். இறந்த நபர் தேனி முருகன் ஒருவரை பற்றி விசாரிக்க சொன்னவர் என்பது நவீனுக்கு தெரிகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நவீன், அந்த சடலத்தை காரில் எடுத்து சென்று யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுகிறார்.
மறுநாள் நவீனுக்கு ஒரு போன் வருகிறது. அதில் புதைத்த சடலத்தை எடுத்து வர சொல்லி சொல்கிறார். நவீனும் அந்த சடலத்தை எடுத்து அவரை சோதனை செய்கிறார். அப்போது அவரிடம் ஒரு மெமரி கார்டு இருப்பது தெரிய வருகிறது. அதில் என்ன இருக்கிறது என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இறுதியில் நவீன் அந்த மெமரி கார்டில் இருப்பதை கண்டு பிடித்தாரா? நவீனை போனில் மிரட்டும் மர்ம நபர் யார்? எதற்காக மிரட்டுகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நவீன் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விசாரிக்கும் விதம், விபத்து ஏற்பட்டவுடன் வருந்துவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். இவரே இப்படத்தை இயக்கியும் இருக்கிறார். கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நவீன். படம் ஆரம்பத்திலேயே திரைக்கதை வேகம் எடுக்கிறது. அடுத்துதடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை உருவாக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். வழக்கமான கிரைம் திரில்லர் திரைப்படம் போல் இல்லாமல் வித்தியாசம் காண்பித்து இருப்பது சிறப்பு. இரண்டாம் பாதியில் வழக்கமான சினிமாத்தனமாக படத்தை இயக்கி இருக்கிறார்.
நாயகியாக வரும் அஞ்சனா பாபு யதார்த்தமாக நடித்து இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து துணிச்சலாக நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மற்றொரு நாயகி கோபிகா சுரேஷ் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தேனி முருகன். இவரும் மகள் அஞ்சனா பாபுவும் பேசும் காட்சிகள் நெகிழும் படி உள்ளது.
கிரைம் திரில்லர் படத்திற்கு தேவையான பின்னணி இசையை கச்சிதமாக கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜாக் வாரியர். பிரபு கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அஜு வில்பரின் படத்தொகுப்பு சிறப்பு.