“இனி நெகடிவ் கதாபாத்திரங்களுக்குத்தான் முக்கயத்துவம் தரப்போகிறேன்” ; வசுந்தரா

இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா, செலக்டிவான படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அந்தவகையில் இந்த வருடத்தில் கண்ணை நம்பாதே, தலைக்கூத்தல் என இரண்டு படங்களிலும் மாடர்ன் லவ் சென்னை என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ள வசுந்தரா மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். அது மட்டுமல்ல, இதுவரை செலக்டிவான கதைகளையும் கதாபாத்திரங்களையும் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த வசுந்தரா, இனி படங்களை தேர்வு செய்வதில் தானே வகுத்துக் கொண்டுள்ள விதிகளை கொஞ்சம் தளர்த்தி புதிய பாதையில் பயணிக்க போகிறேன் என்கிறார்.

“நான் எதிர்பார்ப்பது சவாலான கதாபாத்திரங்களைத்தான். அதில் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்றால் வருஷத்துக்கு ஒரு படம் தான் பண்ண முடியும். ஆனால் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது முதலில் நமக்கே போர் அடிக்காது. நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்பும் இருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதுமே பெண்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. முன்பெல்லாம் மக்கள் அப்படி நடிப்பவர்களை நிஜத்திலும் வில்லியாகவே பார்த்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது.. மக்களும் அந்த கதாபாத்திரத்தை ரசிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள். நடிகை ரம்யா கிருஷ்ணன் பாசிடிவ், நெகடிவ் என இரண்டு கதாபாத்திரங்களிலும் சூப்பராக நடிப்பவர். அவருடைய ரசிகை நான்.. ஒரு பாவமான, கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்கலாம்.

அதனால் இனி கமர்சியல் படங்களில் கவனம் செலுத்தப் போகிறேன். அந்தவகையில் தற்போது ஒரு மல்டி ஸ்டாரர் கதையில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இந்த படமே பெண்களை மையப்படுத்தி ஒரு மாடர்ன் க்ரைம் டிராமாவாகத்தான் உருவாகி வருகிறது. படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கின்றன. அதில் நானும் ஒரு திருப்பமாக இருப்பேன். பப்கோவா என்கிற வெப்சீரிஸை இயக்கிய லட்சுமி நாராயணன் ராஜு தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இது தவிர ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். அதை பற்றிய தகவல் விரைவில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகும்.

தமிழ் தான் எப்போதுமே என் சொந்த வீடு.. என்றாலும் ஒரு நடிகையாக முழுமை பெற மற்ற மொழிகளிலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். குறிப்பாக மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. மலையாள படங்களை பார்க்கும்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் நடித்திருக்கலாமே என்கிற ஏக்கம் இயல்பாகவே எனக்குள் எழும். தெலுங்கில் ஆரம்பத்தில் எனக்கு சில வாய்ப்புகள் வந்தது. சில சூழல்கள் காரணமாக அந்த வாய்ப்புகள் மிஸ் ஆகி போனது. அந்த வகையில் மன திருப்திக்காக மலையாள படங்களிலும் கேரியர் வளர்ச்சிக்காக தெலுங்கு படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்..

இந்த வருடம் நான் நடித்த மூன்று படங்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்த வருடம் நிச்சயம் இரண்டு படம் வெளியாகும்” என்கிறார் வசுந்தரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top