ஐ.டி.யில் வேலை பார்த்து வரும் நாயகன் ஹரிஷ் கல்யாண், மனைவி இந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். கர்ப்பிணியாக இருக்கும் இந்துஜாவுடன் மாடி வீட்டிற்கு வாடகைக்கு செல்கிறார். கீழ் வீட்டில் அரசு வேலை பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் மனைவி மக்களுடன் வாழ்ந்து வருகிறார். எம்.எஸ்.பாஸ்கர் மிகவும் நேர்மையாகவும், சிக்கணமாகவும் வாழ்கிறார்.
இரண்டு குடும்பமும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் புதிய கார் ஒன்றை வாங்குகிறார். இதை தன் வீட்டின் கீழ் நிறுத்த, எம்.எஸ்.பாஸ்கரின் பைக் விடுவதற்கு சிரமமாக மாறுகிறது. ஒருநாள் எம்.எஸ்.பாஸ்கர் தன் பைக் எடுக்கும் போது தவறுதலாக காரில் கோடு விழுந்து விடுகிறது. இதனால் இரண்டு பேருக்கும் சண்டை ஆரம்பமாகிறது.
இதில் வீம்புக்காக எம்.எஸ்.பாஸ்கர் புதிய கார் ஒன்றை வாங்குகிறார். இதிலிருந்து யார் காரை வீட்டில் பார்க்கிங் செய்வதில் பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் இவர்களின் கார் பார்க்கிங் பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், துறுதுறு இளைஞனாக நடித்து இருக்கிறார். நல்ல கணவனாக இந்துஜா மீது பாசம் காட்டும் போதும், எம்.எஸ்.பாஸ்கர் மீது கோபப்படும் போதும் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் இந்துஜா அழகாக வந்து அளவான எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கணவருக்காக மன்னிப்பு கேட்கும் காட்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அமைதி, வெறுப்பு, நேர்மை, பரிதவிப்பு, கோபம், சண்டை என நடிப்பில் பளிச்சிடுகிறார். முழு கதையையும் தன் தோளில் தாங்கி இருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இவரது மனைவியாக வரும் ரமா ராஜேந்திரா, மகளாக வரும் பிராத்தனா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
கார் பார்க்கிங்கால் ஒரு வீட்டில் இருக்கும் பிரச்சனையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஈகோவால் ஒருவர் எந்த எல்லைக்கும் போவார் என்பதை சொல்லி இருக்கிறார். ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் இருக்கும் இடையே நடக்கும் ஈகோ போரை முதல் பாதியில் விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் யதார்த்த மீரல்களை காட்சி படுத்தி இருக்கிறார் இயக்குனர் சரவணன்.
சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் கதையோடு பயணிக்கிறது. பின்னணி இசை அவரது வழக்கம் போல் உள்ள ஸ்டைலில் இருக்கிறது. ஜிஜு சன்னி ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக அமைந்து இருக்கிறது.