ஜேம்ஸ் வசந்தன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘தமிழர் திருநாள் தையே’ பொங்கல் பாடலில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வகிப்பவரும் தொழிலதிபருமான கால்டுவெல் வேள்நம்பி இந்தப் பாடலின் தேவையை உணர்ந்து இதை தயாரிக்க முன்வந்தார்.
பொங்கல் பண்டிகை, தமிழர்களின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அதன் மகத்துவத்தை இந்த பாடல் கொண்டாடுகிறது.
முதல் யூனிட் இயக்குநர் பூபேஷ் எஸ். மற்றும் இரண்டாம் யூனிட் இயக்குநர் ராஜா குருசாமி இணைந்து இந்த கண்கவர் வீடியோ பாடலை உருவாக்கியுள்ளனர். ராஜா பட்டாசார்ஜி மற்றும் ஆண்டனி ரூத் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், சங்கீதா பிரபா நடன இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர்.
வேல்முருகன், பாலக்காடு ஸ்ரீராம், பிரியங்கா என் கே, ஷிபி ஸ்ரீனிவாசன், பாரதி கால்டுவெல் மற்றும் அனு ஆனந்த் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.
இது குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன், “ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் கொண்டாடும் பொங்கல் திருநாள் குறித்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகக் கூடிய வகையிலான சிறந்ததொரு பாடல் இல்லை என்றே சொல்லலாம். உலகமெங்கும் உள்ள தமிழ் சமுதாயத்திற்காக இப்படி ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்ற எங்களின் அவாவின் விளைவே ‘தமிழர் திருநாள் ‘தையே’,” என்றார்.