பள்ளிப் படிப்பின்போது தனக்கு கசப்பான அனுபவத்தை தந்த அர்ஜூன்தாஸை, கல்லூரி படிப்பின்போது பழி வாங்கத் துடிக்கிறார் காளிதாஸ் ஜெயராம். இருவருக்கும் மாணவ மாணவிகளின் பேராதரவு கிடைக்க, இருவருக்குமான பகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் அடிதடி, வெட்டுக்குத்து என பெரிய பகை உண்டாகிறது.
இறுதியில் இருவரும் இடையேயான மோதல் என்ன ஆனது? மோதல் முடிவுக்கு வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.நாயகன் அர்ஜூன் தாஸ் தனக்கே உரிய வில்லன் ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். முந்தைய படங்கள் போல அதே ஸ்டைலில் நடித்து இருப்பது கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம். காளிதாஸ் ஜெயராம் பழிவாங்கும் உணர்வுடன் படம் முழுவதும் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். இருவரும் போட்டி போட்டு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.நாயகிகளாக நடித்திருக்கும் பானு, சஞ்சனா, அம்ருதா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. காதலர்களுடன் சண்டை, சல்லாபம் என அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.மாணவ மாணவிகளின் ஈகோ மோதல், அவர்களின் நல்லது கெட்டது பற்றி யோசிக்காத பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடற்ற சுதந்திரம், அனுபவிக்கும் போதை, முத்தப் பரிமாற்றம், ஓரினச் சேர்க்கை, சாதி ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிஜாய் நம்பியார். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்தும் கொடுத்து இருப்பது சிறப்பு. மேக்கிங் ஸ்டைலுக்கு பெரிய பாராட்டுக்கள்.திரைக்கதைக்கு பெரிய பலம் மாடர்ன் டேப் ஸ்கோர்ஸ் குழுவினரின் பின்னணி இசை. பல காட்சிகள் ரசிக்கும் படி உள்ளது. சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி ஆகியோரின் இசையில் பாடல்கள் சிறப்பு.ஒளிப்பதிவின் தரத்தை தனியாக பாராட்டலாம். ஜிம்ஷி காலிட் மற்றும் பிரெஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோரின் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.