”தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்பதுதான் சரியானதாக இருக்கும்” ; எமகாதகன் விழாவில் எஸ்.வி.சேகர் பேச்சு

சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகன்;. பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப்படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமகாதகன்’ படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி சேகர், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் திருமலை, நடிகர் சௌந்தர்ராஜன்  மற்றும் இயக்குநர் சரவணசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் எஸ்வி சேகர் பேசும்போது,
“வெற்றிகரமான மனிதர்களை எமகாதகன் என சொல்வது உண்டு. அந்த வகையில் இந்த படத்தின் டைட்டில் நெகட்டிவ் ஆக இல்லாமல் அதேசமயம் அனைவரும் புழங்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. இன்று சின்ன படங்கள் தியேட்டருக்கு வருவது சிரமமாக இருக்கிறது. பெரிய படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சின்ன படங்களையும் தயாரித்து ஒரே நேரத்தில் திரைக்கு கொண்டு வரவேண்டும். அப்போதுதான் சின்ன படங்கள் மீதும் கவனம் திரும்பும்.

திரைப்படங்கள் சென்சார் செய்யப்பட்டிருந்தால் அந்த படங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்கிற ஒரு விதி இருக்கிறது. அதை தமிழக முதல்வர் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலையில், அப்படியே கிடைத்தாலும் போட்ட பணத்தை எடுக்க முடியாத சூழலில் இந்த மானியம் தயாரிப்பாளர்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். அதேபோல தனிப்பட்ட முறையில் யூட்யூப் நடத்துபவர்களுக்கு என ஒரு நல வாரியம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் முதல்வரின் கோரிக்கைக்கு வைக்கிறேன்.

எனக்கு இயக்குனர் அமீரை ரொம்பவே பிடிக்கும். தனது சொந்தப் பெயரை எங்கேயும் மறைத்துக் கொள்ளாமல் அதை துணிச்சலாக எல்லா இடத்திலும் சொல்லக்கூடிய தைரியம் மிகுந்தவர். ஒரு தயாரிப்பாளரிடம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை திரையில் கொண்டு வருவது ஒரு படைப்பாளனால் தான் முடியும். படம் வெளியாகி அதுவும் ஜெயித்த பிறகு பத்து வருடம் கழித்து அதைப்பற்றி தவறாக பேசுவது என்பது சரியானது அல்ல. இந்த மாதிரி ஒரு நிகழ்வு நடந்திருக்கக்கூடாது. மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஆனால் மன்னிப்பு கேட்பதுதான் சரியானதாக இருக்கும்.. அதுமட்டுமல்ல ஞானவேல் ராஜா பேட்டி கொடுத்த அந்த வீடியோவையும் யூட்யூப்பில் இருந்து நீக்குவது தான் இன்னும் சரியாக இருக்கும். பிடித்ததை செய்தால் அவரை ஆஹா ஓஹோ என புகழ்ந்து பேசுவதும் நமக்கு பிடிக்காததை செய்தால் அவரை என்ன வேண்டுமானாலும் அவமரியாதையாக பொதுவெளியில் பேசுவதும் தவறான விஷயம்.

நாம் ஒருவரை குறை சொல்வதற்கு முன்பு நாம் சரியாக இருக்கிறோமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். படம் பார்க்க செல்பவர்கள் படத்திற்கு என்ன சான்றிதழ்கள் கொடுத்துள்ளார்கள் என்பதை கவனித்து தியேட்டர்களுக்கு குடும்பத்தை அழைத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் யு சர்டிபிகேட் பெற்ற சில படங்களுக்கு மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும்போது ஏ சர்டிபிகேட் தான் கொடுக்கப்படுகிறது. காரணம் அது சர்வதேச நிலைப்பாடு. ஆனால் சென்சார் செய்யப்படும் இடங்களில் உள்ள சில அட்ஜஸ்ட்மென்ட் காரணமாக இது போன்று நிகழ்கிறது. எல்லா இடத்திலும் தவறுகள் நடந்தாலும் சினிமா மற்றும் அரசியலில் அவை மிகைப்படுத்தி காட்டப்படுகின்றன” என்றார்..
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,
“இன்றைக்கு எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்கள் தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்றும் கூட ரிலீஸ் ஆக முடியாமல் தவிக்கின்றன. மிகப்பெரிய படமான துருவ நட்சத்திரத்திற்கு கூட ரிலீசாக முடியாத அளவிற்கு பொருளாதார பிரச்சனை. அதற்கு காரணம் படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு இருக்கும் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் கடன்.
வருடத்திற்கு கிட்டத்தட்ட 30 பெரிய படங்கள் வரை தான் ரிலீஸ் ஆகின்றன. மற்ற நேரங்களில் தியேட்டர்கள் சின்ன படங்களின் ரிலீஸுக்கும் இடம் கொடுக்கிறார்கள். படம் எடுக்க வருபவர்கள் யாரையும் நம்பாமல் படம் எடுத்து தங்களுக்கு ரிலீஸ் பண்ணும் சக்தி இருந்தால் மட்டும் படம் எடுக்க வாருங்கள். இதுவரை கிட்டத்தட்ட 30 சின்ன பட தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து விட்டு திரும்பி வாங்க முடியாமல் தவித்து வருகிறேன். அவர்கள் கையில் படம் இருக்கிறது. சென்சாரும் வாங்கி விட்டார்கள். ஆனால் படங்களை ரிலீஸ் பண்ண முடியவில்லை. இன்று பெரிய படங்கள் 800 தியேட்டர்கள் வரை ஆக்கிரமித்துக் கொண்டு விடுவதால் சிறிய படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தியேட்டர்காரர்களும் பெரிய படங்களுக்கே ஆதரவு தருகிறார்கள். அவர்களுக்கு வருடத்தில் ஏற்படும் இழப்பை அதை வைத்து தான் சரி கேட்டுகிறார்கள். சினிமாவிற்கு இன்று சிரமம் தலைக்கு மேல் இருக்கிறது இன்று கூறினார்
தயாரிப்பாளர் கிருஷ்ணமணி பேசும்போது,
“நான் சிங்கப்பூரில் பல தொழில்கள் செய்து வருகிறேன். தஞ்சாவூரில் பிறந்து சென்னையில் பணியாற்றியதால் சினிமாவில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம். அப்போதுதான் இயக்குனர் கிஷன்ராஜை சந்தித்தபோது இந்த படத்தின் கதையை கூறினார். குறைந்த நாட்களிலேயே இந்த படத்தை எடுத்துக் கொடுத்தார். இது போன்ற நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் வெளிவருவதற்கு மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்
இயக்குனர் கிஷன்ராஜ் பேசும்போது,
“படத்தின் தயாரிப்பாளருக்கு முழு கதையும் தெரியாது. ஒரு அவுட்லைன் மட்டும்தான் கூறினேன். என்னையும் எனது குழுவையும் நம்பி முதலீடு செய்து இப்போது இசை வெளியீட்டு விழா வரை கொண்டு வந்துள்ளார். மதுரை பக்கத்தில் உள்ள தென்னமநல்லூர் என்கிற ஊரில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஊர் மக்கள் எங்களை தங்கள் குடும்பத்தினராகவே நடத்தினார்கள். அவர்களுக்கு இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படத்தின் பின்னணி இசை உருவாக்கத்தின் போதே இசையமைப்பாளர் விக்னேஷ் ராஜாவிடம் இதை பார்த்துவிட்டு உங்களுக்கு படம் வெளிவருவதற்குள்ளாகவே புதிய வாய்ப்பு தேடி வரும் என்றேன். அதேபோல அவருக்கு ஒரு பெரிய படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

ZEE MUSIC.CO நிறுவனம் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது.

நடிகர்கள்

கார்த்திக், மனோஜ், ரஷ்மிகா திவாரி, வட்டகரா சதீஷ்

தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குநர் ; கிஷன்ராஜ்
இசையமைப்பாளர் ; விக்னேஷ் ராஜா
ஒளிப்பதிவு ; LD
படத்தொகுப்பாளர் ; ராம்நாத்
பாடலாசிரியர் ; ஹரிஹர சுப்பிரமணியம், வி ஜே விஜய்
களை ; பழனிக்குமார் M
மக்கள் தொடர்பு ; கேப்டன் MP ஆனந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top