இளைய கதாநாயகர்களில் ஆரம்பித்து முதிய கதாநாயகர்கள் வரை நடித்தும் பிறகு விஷால் கூட லத்தி திரைப்படத்தில் நடித்தும் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் முன்னனி நடிகையாக விட வேண்டும் என்று கடினமாக முயற்சி செய்கிறார் நடிகை சுனைனா.
அவரது முயற்சிக்கு இந்த ரெஜினா படம் கை கொடுத்ததா,இல்லையாபார்க்கலாம்.மலையாளத்தில் ’பைப்பின் சுவத்திலே பிரணாயம்’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். சதீஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்த, படத்தையும் தயாரித்துள்ளார்
ரித்து மந்திரா, ஆனந்த் நாக், பவா செல்லத்துரை, சாய் தீனா, நிவாஸ் அதிதன், விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக புரட்சிகரமான பெண்ணாக சுனைனா இப்படத்தில் தோன்றும் வகையிலான போஸ்டர்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது.
சுனைனாவின் ஆக்ஷன் அவதாரம்!
நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆக்ஷன் அவதாரத்தில் சுனைனாவை போஸ்டர்கள், ட்ரெய்லரில் பார்த்துவிட்டு படுஆர்வமாகி படத்துக்குச் சென்றால் மிகப்பெரும் ஏமாற்றம்! எமோஷனல் காட்சிகளில் முயன்றவரை சுனைனா நியாயம் சேர்த்துள்ளார். ஆனால் புரட்சிப் பெண், ராக் ஸ்டார் வகையறா கதாபாத்திரத்தில் போராடி சுனைனாவை திணிக்க முயன்றிருக்கிறார்கள். பெட்டர் லக் சுனைனா!
பவா செல்லதுரைக்கு தமிழ் சினிமாவில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் இருந்து இயக்குநர்கள் சிறிது காலம் ஓய்வு தர வேண்டும். மலையாள பிக்பாஸ் புகழ் நடிகை ரித்து மந்த்ராவுக்கும் கிட்டத்தட்ட இதேபோன்ற கதாபாத்திரம்.
மலையாள இயக்குநர் டொமின் டி செல்வாவின் முதல் தமிழ் திரைப்படம். ஆனால் மலையாள திரைப்படம் பார்க்கும் உணர்வே மிஞ்சுகிறது. பெண் மைய படம் என்று சொல்லி ஆண்மையவாத பார்வையிலேயே படம் செல்கிறது. சதீஷின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை, திக்குத் தெரியாத திரைக்கதையுடன் சேர்ந்து பின்னணி இசையும் தூக்கத்தையே வரவழைக்கிறது.
கணவனைக் கொன்றவர்களுக்கு எதிராக நியாயம் கேட்டு ரெஜினாவின் அழுகுரலோடு தொடங்கும் படம், இலக்கின்றி எங்கெங்கோ பயணிக்கிறது. இடைவெளி வரையிலுமே என்ன சொல்ல வருகிறார்கள், எங்கே படம் பயணிக்கிறது எனத் தெரியாமல் நம்மை சோர்வடையவைக்கிறார்கள்.
மேலும், ரெஜினாவுக்கு தோள்கொடுக்கும் தோழர்கள், திருநங்கை என அனைத்தும் உச்சக்கட்ட செயற்கை. இதற்கு மேல் சிங்கம், புலி என பஞ்ச் டயலாக் பேசவிட்டு சுனைனா ரசிகர்களையே காண்டாக்குகிறார்கள்!
மொத்தத்தில் இதற்கு முன் பார்த்த சுமாரான திரைப்படம் பரவாயில்லை என உணரவைத்துவிட்டார்கள். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வந்த இந்த ரெஜினா – ஏமாற்றம்!