ஷாட் பூட் த்ரீ பட நடிகை கோமல் சர்மாவுக்கு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் பாராட்டு

இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சமீபத்தில் ஷாட் பூட் த்ரீ என்கிற படம் வெளியானது. குழந்தைகளுக்கும்  செல்லப்பிராணிகளுக்குமான அன்பை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கோமல் சர்மா.

தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமான கோமல் சர்மா, அதன்பிறகு ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே நடித்த வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.. இப்போது வெளியாகி உள்ள ஷாட் பூட் த்ரீ படத்தில் இவரது  நடிப்பிற்காக பல இடங்களில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக விலங்குகள் நல அமைப்பாளர்கள் பலரும் இவரை அழைத்து பாராட்டி வருவது தான் ஆச்சரியமான ஒன்று.. இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் தற்போது கிடைத்து வரும் பாராட்டுக்கள் குறித்தும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார் கோமல் சர்மா.

“இந்த படம் குழந்தைகளையும் விலங்குகளையும் மையப்படுத்தி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள படம். பொதுவாகவே எனக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவைகளுக்கான ஒரு குரலாக இந்த படத்தின் மூலம் மாறியது எனக்கு மகிழ்ச்சி. அதுமட்டுமல்ல பிரபல இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையில் உருவான இந்த படத்தில் நடித்ததும் இன்னொரு மிகப்பெரிய மகிழ்ச்சி. ஒவ்வொரு காட்சியையும் அவர் தனது இசையால் கவிதையாக மாற்றி இருந்தார்.. மாநாடு படத்தில் வெங்கட்பிரபு டைரக்சனில் நடிக்க வாய்ப்பு தேடி வந்து சில காரணங்களால் அது மிஸ் ஆனது. ஆனால் இந்த படத்தில்  அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்னொரு சந்தோசம். அவருக்குள் ஒரு மிகச்சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் பஞ்சாபி கலந்த தமிழ் பேசும் பெண்ணாக நடித்துள்ளேன். அருண் வைத்தியநாதன் இதில் நடித்த எல்லோருக்குமே தனித்தனி உடல் மொழியை கொடுத்து நடிக்க வைத்தார். இந்த படத்திற்காக படப்பிடிப்பிலேயே முதன்முதலாக லைவ் ஆக பேசி நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் எனக்கு இது எளிதாகவும் இருந்தது.

இப்போது இருக்கும் குழந்தைகளிடம் நடிப்பு குறித்த தெளிவு, சின்சியாரிட்டி எல்லாமே இருக்கின்றன. இந்த படம் பார்த்துவிட்டு குழந்தைகள் தங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக என்னை நினைக்கிறார்கள். பல குழந்தைகள் என்னை பார்பி டால் ஆகவே கருதுகிறார்கள். இந்த படம் மட்டுமல்ல இதேபோன்று குழந்தைகளை மையப்படுத்தி மலையாளத்தில் நடிகர் மோகன்லால் இயக்கியுள்ள பரோஸ் படத்தில் நான் நடித்தபோது கூட என்னை துணிக்கடையில் இருக்கும் பொம்மை என்று சிலர் நினைத்த நகைச்சுவை நிகழ்வுகளும் நடந்தன.

ஷாட் பூட்  த்ரீ படம் பார்த்துவிட்டு விலங்குகள் நல அமைப்பிலிருந்து பலரும் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். இதுகுறித்து மேற்கொண்டு ஆக்கப்பூர்வமான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் எனக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுநாள் வரை இந்த விஷயங்களை சைலன்ட்டாக செய்து வந்தேன். தற்போது கிடைத்துள்ள இந்த வரவேற்பு மற்றும் ஆதரவால் விலங்குகளுக்கான பாதுகாப்பு மற்றும் நல விஷயங்களை இன்னும் வெளிப்படையாகவே செய்ய முயற்சி எடுக்கப் போகிறேன்.

ஷாட் பூட் த்ரீயை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் நான் நடித்துள்ள பப்ளிக் என்கிற படம் வெளியாக இருக்கிறது. மலையாளத்தில் மோகன்லால் உடன் நடித்துள்ள பரோஸ் திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது. இது தவிர மலையாளத்தில் இரண்டு படங்களிலும் ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன” என்று கூறினார் கோமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top