1960-1980 களில் மாங்கொல்லை கிராமத்தில் நடைப்பெறும் கதையாக அமைந்துள்ளது சார் திரைப்படம். இந்த கிராமத்தில் உயர்சாதியவர் மட்டுமே கல்வி பெற முடியும் என்ற விதி நிலவி வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கல்விபெற பல முயற்சிகள் எடுத்தும் அதை ஊர் தலைவரான ஜெயபாலன் தடுத்துவிடுகிறார்.
இதை முறியடிக்கும் வகையில் அண்ணாதுரை என்ற வாத்தியார் அந்த ஊரில் ஆரம்ப பள்ளிக்கூடத்தை கட்டி மாணவர்களுக்கு கல்வியை தருகிறார். இவருக்குப் பிறகு அந்த பள்ளிக்கூடத்தை நடுநிலை பள்ளியாக மாற்றி சரவணன் நடத்தி வருகிறார். சிவபாலன் சாமியாடி கடவுள் குறி சொல்வது வழக்கமாக கொண்டுள்ளார். கடவுள் மீது பழியை சுமத்தி அந்த பள்ளிக்கூடத்தை எப்படியாவது இடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுப்படுகிறார்.
காலம் மாறி தலைமுறைகள் மாறினாலும் இந்த பழக்கவழக்கங்களும் மூட நம்பிக்கைகளும் இருந்துக் கொண்டே இருக்கிறது. தற்பொழுது அந்த பள்ளியை நடத்த சரவணனின் மகனாக விமல் வருகிறார். முதலில் அவருக்கு அந்த பள்ளியில் வேலை செய்ய விருப்பமே இல்லை. ஒருக்கட்டத்திற்கு பிறகு அங்கு இருக்கும் அநீதியைப் பார்த்து கல்வி அனைவருக்கும் சமமாக வேண்டும் அதற்கு கடவுள் எதிராக வந்தாலும் பரவாயில்லை என நிற்கிறார். இதற்கு அடுத்து என்ன நடந்தது? கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்ததா? பள்ளிக்கூடம் இடிக்கப்பட்டதா? அல்லது பள்ளிக்கூடம் மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்படுதா? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விமல், தனது வழக்கமான நடிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறார். காதல், காமெடி என கலகலப்பாக ஆரம்பித்து, பின்னர் பொறுப்பான ஆசிரியராக மாறி மனதில் பதிகிறார்.வில்லனாக நடித்து இருக்கும் சிராஜ், நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார். சரவணன் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சாயாதேவி, ரமா, ஜெயபாலன் மற்றும் பலர் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் கல்வி அவசியம் மற்றும் அது சமமாக கிடைக்கவேண்டும் அதற்கு யார் எதிராக இருந்தாலும் அது தவறு என்ற கருத்தை மிகவும் வலிமையாக கூறியதற்கு இயக்குனர் போஸ் வெங்கட்டிற்கு பாராட்டுகள். கதாபாத்திரங்கள் தேர்வு அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை.இனியன் ஹரிஸுடைய ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.சித்துகுமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.SSS பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார் திரைப்படத்தை தயாரித்துள்ளது.