நேர்மையான போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் சில காரணங்களுக்காக காவல்துறை பணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார். பணியில் இல்லாவிட்டாலும் சீருடை அணியாத அதிகாரியாக சமூகத்தில் நடக்கும் மர்மங்களை துப்பறியும் பணிகளில் எதிர்ப்புகளுக்கிடையே ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திகேயன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் நடுரோட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பலத்த காயத்துடன் கிடக்கிறார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கிறார். சிகிச்சை பலனின்றி அந்த பெண் மரணமடைகிறார். மரணமடைந்த பெண் யார்? அவரது சாவுக்கு காரணம் யார்? என்று கார்த்திகேயன் கண்டு பிடிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளும் சம்பவங்களும் தான் படத்தின் மீதி கதை.கதாநாயகனான கார்த்திகேயன் புதுமுகம் என்றாலும் அவரது நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. சஸ்பெண்டு ஆகி. மனமுடைந்து நின்றாலும் அதே போலீஸ் குணத்துடன் துப்பறியும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். சண்டைக்காட்சியில் சாகசம் காட்டியுள்ளார். மீசை இல்லாமல் கையில் துப்பாக்கியுடன் வின்சென்ட் அசோகன் கார்த்திகேயனுடன் மோதும் காட்சிகளிலும், கொலை செய்வதற்காக அவரை தேடி அலையும் காட்சிகளிலும் வில்லனாக படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். படத்தில் பெரும்பாலான காட்சிகள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வின்சென்ட் அசோகனுக்கு கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.
மன்சூர்அலிகான் தனக்கே உரித்தான பாணியில் கதைக்கு கலகலப்பூட்டுகிறார். சுரேஷ் மேனன் சில காட்சிகளே வந்துள்ளார்.கதாநாயகி சுபிக்ஷாவுக்கு பெரிய பங்கு படத்தில் இல்லை. நிழல்கள் ரவி, பாண்டியராஜன் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். அதிக மதுபான பார் காட்சிகள் பலகீனம். அச்சு ராஜாமணி இசையில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்த கதையை பொழுது போக்கு படமாக இயக்கியதுடன் படம் பிடித்து காட்டியுள்ளார் சதீஷ் கீதாகுமார்.