கொள்ளைக்காரராக இருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம், மகேஷ் சுப்ரமணியம், பால சரவணன், சென்றாயன் ஆகியோர் உதவியாளராக சேருகிறார்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் மொட்டை ராஜேந்திரன், ஒரு கட்டத்தில் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு பெரிய திருட்டு ஒன்றை செய்ய சொல்கிறார்.
அதன்படி கைலாசம் என்னும் கிராமத்தில் விலைமதிப்பு மிக்க ஒரு கிரீடம் இருப்பதாக தெரிந்துக் கொண்டு மூன்று பேரும் அங்கு செல்கிறார்கள். கிராமத்தில் நடக்கும் திருவிழாவை படம் பிடித்து யூடியூப்பில் போடுவதாக கூறி ஊர் மக்களை ஏமாற்றி மூன்று பேரும் தங்கி கிரீடத்தை தேடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஊர் தலைவரான மாரி முத்து வீட்டில் இருப்பதாக தெரிந்துக் கொண்டு கொள்ளை அடிக்கிறார்கள். கிரீடத்தை வெளியில் எடுத்து வரும் நிலையில் மாரி முத்துவிடம் மகேஷ் சுப்ரமணியம், பால சரவணன் ஆகியோர் சிக்கிக் கொள்கிறார்கள். எதிர்பாராத விதமாக கிரீடம் உடைந்து விடுவதால், அது போலி என அவர்கள் தெரிந்துக் கொள்கிறார்கள்.
இறுதியில் மகேஷ் சுப்ரமணியம், பால சரவணன், சென்றாயன் ஆகியோர் மாரி முத்துவிடம் இருந்து தப்பித்தார்களா? உண்மையான கிரீடம் என்ன ஆனது? கிரீடம் எங்கு இருக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபுக்கு அதிகம் வேலை இல்லை. மிகவும் குறைந்த அளவு காட்சிகளே கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் கொடுத்த வேலையை ஓரளவிற்கு செய்து இருக்கிறார். நாயகியாக வரும் இனியா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனக்கே உரிய பாணியில் நடிப்பு திறனை கொடுத்து இருக்கிறார்.
மகேஷ், பால சரவணன், சென்ராயன் ஆகியோர் படம் முழுக்க அதிக காட்சிகளில் பயணித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்கள். அங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.
கோவில் கிரீடம் அதை சுற்றி நடக்கும் மர்மம் என படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் டெனிஸ் மஞ்சுநாத். வழக்கமான பேய் படங்கள் போல் இல்லாமல் படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் வலுவில்லாமல் இருப்பது படத்திற்கு பலவீனம்.
கே.எஸ்.மனோஜ் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ரவி வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக அமைந்து இருக்கிறது.