தமிழ் திரையுலகின் ஐகானிக் நட்சத்திர நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது இசை கச்சேரி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களை கவரத் தயாராக உள்ளார். இந்த கான்செர்ட் டூர் ‘ரோமியோ விஜய் ஆண்டனி லைவ்-இன் கான்செர்ட்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் நான்கு முக்கிய நகரங்களான திருச்சி (மார்ச் 30), ஏப்ரல் 6 (சேலம்), கோவை (ஏப்ரல் 7) மற்றும் ஏப்ரல் 13 (மதுரை) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
விஜய் ஆண்டனியின் இசை கச்சேரிகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர் இதற்கு முன்பு நடத்திய இசை நிகழ்ச்சிகளால் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தார். இப்போது இவரது இசைக் கொண்டாட்டத்தில் மூழ்கித் திளைக்க தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உற்சாகத்துடன் இதுகுறித்து பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இசை சுற்றுப்பயணம் மேற்கொள்வது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சி, சேலம், கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது கலை மற்றும் இசை ஆகியவற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. திறமையான திரைக்கலைஞர்களையும் தரமான படைப்புகளை ஆதரிப்பவர்களாகவும் அங்குள்ள ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் சினிமாவையும் இசையையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகப் போற்றுகிறார்கள். அவர்களுக்காக நான் இசை நிகழ்ச்சி நடத்தும்போது லைவாக அவர்களுடைய உற்சாகத்தை நேரில் காண ஆவலுடன் உள்ளேன்” என்றார்.