இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,இயக்குனர் வெற்றிமாறன்,அவரது மனைவி ஆர்த்தி வெற்றி மாறன்,பேராசிரியர் ராஜநாயகம், முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன்குமார், மருத்துவர் வந்தனா,ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதலாவதாக பேசிய பேராசிரியர் ராஜநாயகம்,
” கையறு நிலையில் துக்கமான சூழ்நிலையில்,இந்த பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் முதுகெலும்பாக, இருபெரும் தூண்களில் ஒரு பெரும் தூணாக இருந்த வெற்றி துரைசாமியின் எதிர்பாராத மறைவு அஞ்சலி செலுத்த ஆற்றல் குன்றிய சூழலானாலும், இந்த ஆய்வகத்திற்கு அவர் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவரது மறைவை அவரது குடும்பத்தினர்,இந்த சூழலை கடந்து வர தேவையான ஆற்றலை இறைவன் அளிக்க வேண்டும்.வெற்றி துரைசாமியின் நினைவை போற்றும் வகையில் திரை மாணவர்களுக்கு விருதுகள் அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அவருக்குப் பிறகு பேசிய தயாரிப்பாளர் தாணு,
“வெற்றி துரைசாமி மறைவால் மிக மிக சொல்லொணாத் துயரத்திற்கு ஆளானேன்.அவருடன் பழகிய காலங்கள் சிறப்பான காலங்கள் ஆகும். இந்த பன்னாட்டு திரை மற்றும் பண்பாடு ஆய்வகம் திறப்பதற்கு நான் கொடுத்த தொகை மிகப் பெரிய உதவியாக இருந்ததாக மீண்டும் மீண்டும் நன்றி கூறினார். எப்பொழுது எனக்கு ஒரு கதையை தயார் செய்யப் போகிறாய் என்று நான் கேட்டதற்கு,வெற்றி துரைசாமி வெற்றிமாறனின் முழு சம்மதத்துடன் தான் தங்களிடம் வந்து படத்திற்கான கதையை கூறுவேன் என்று கூறினார். பக்தியுடனும் பாசத்துடனும் வெற்றிமாறன் அவர்களை குருவாக பாவித்துக் கொண்டிருந்தார். அவருடைய தந்தையார் எனக்கு மிகவும் நெருக்கமானவர், அவருக்கு இது பேரிழப்பாகும் எந்த தந்தைக்கும் இப்படி ஒரு துயரம் நிகழக் கூடாது”,
என்று கூறினார்.
அதன் பின்னர் IIFC முன்னாள் மாணவர் பிரின்ஸ் பேசும்பொழுது,
” வெற்றி துரைசாமி இந்த இடம் கொடுக்கவில்லை என்றால் இந்த நிறுவனம் உருவாகாமல் போயிருக்கலாம். என்னை மாதிரி நிறைய மாணவர்களின் கனவை நிறைவேற்றிய வெற்றி துரைசாமி நம்மிடையே இல்லையென்பது மிகவும் வருத்தமாக உள்ளது. அவரது தந்தையார் கூறியது போல குடிமைப்பணி மாணவர்கள் போல திரைத்துறை மாணவர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்”, என்று கூறினார்.
IIFC முன்னாள் மாணவர் அஜித் பேசும்பொழுது,
” இந்த ஆய்வகத்திற்காக அனைத்து தருணங்களிலும் நம்முடன் இருந்தார். சமூக சமத்துவத்திற்காக பாடுபட்டார். இப்படி இயற்கை அவரை எடுத்துக் கொண்டது, மிகவும் வருத்தமாக உள்ளது”, என்றார்.
பிறகு மேஜர் மதன்குமார் அவர்கள் பேசிய போது,
” மிகவும் துயரமான நாள்.வெற்றி துரைசாமியின் மறைவு மிகவும் வருத்தமான நிகழ்வு. சிலர் மட்டுமே தமது வாழ்நாளில் முத்திரை பதித்து செல்கின்றனர்.தமது தந்தையைப் போல சாமானிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த ஆய்வகம் பயன்பட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் வணிக நோக்கமில்லாமல் இடமளித்தார். ஒரு தந்தையின் புத்திர சோகம் என்பது கொடுமையானது மற்றும் குடும்பத்தினரின் வலி என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த ஆய்வகத்தில் இருந்து வரும் மாணவர்கள் தாங்கள் எடுக்கும் திரைப்படங்களை திரு. வெற்றி துரைசாமி அவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறினார்.
மருத்துவர் வந்தனா அவர்கள் பேசும்பொழுது,
” என்னிடம் ‘அக்கா அக்கா’ என்று எப்போதும் அன்பை பொழிந்தார். என்னிடம் இருந்த வளர்ப்பு நாய்க்கான அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு,உதவி புரிந்து, தத்தெடுத்துக் கொண்ட ஒரு புனித ஆத்மா அவர். அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு என்பது ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மருத்துவ ரீதியில் அவர் அனுபவித்த கஷ்டமான சூழ்நிலைகளை போராடி மீண்டு வந்தார். அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும்”, என்று கூறினார்.
ஜெகதீஷ் பேசும் பொழுது,
“சமூக பொருளாதார அரசியல் ரீதியாக பின் தங்கி இருக்கக்கூடிய மாணவர்களை ஒட்டுமொத்தமாக ஊடகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற ராஜநாயகம் அவர்களின் ஆவலை,ஒரு நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற கனவு திட்டத்தை மிகப்பெரிய அளவில் உதவி செய்தவர்தான் வெற்றி துரைசாமி. மனிதர்கள் மட்டுமில்லாமல் விலங்குகள் பறவைகளுடன் கூட மனிதநேயத்துடன் பழகுபவர்தான் வெற்றி துரைசாமி. இந்த ஆய்வகத்தின் மாணவர்கள் வெற்றி துரைசாமி அவர்களின் கனவை நிறைவேற்ற பாடுபட வேண்டும். சைதை துரைசாமியின் குடும்பத்தார்க்கும் பணியாளர்களுக்கும் வருத்தத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.
அடுத்ததாக ஆர்த்தி வெற்றிமாறன் பேசும் பொழுது,
” முதன்முறையாக 2012-ஆம் ஆண்டு தான் சந்தித்தோம்.இந்த IIFC-தான் அவருடன் பயணிக்க காரணமாக இருந்தது. இந்த இடத்தை அவர் IIFC-க்காக கொடுத்து வகுப்பு எடுக்கவும்,இதை நடைமுறைப்படுத்தவும் நிறைய ஆலோசிக்க வேண்டி இருந்தது.அவர் மிகவும் எளிமையான மனிதர் எளிதில் அணுகக் கூடியவர். எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த நிறுவனத்தை இந்த அளவுக்கு கொண்டு வருவதற்கு அவரால் மட்டுமே சாத்தியமானது. அவர் குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,”என்றார்.
இறுதியாக இயக்குனர் வெற்றிமாறன் பேசும்பொழுது,
” திரு.வெற்றி துரைசாமி அவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட இடங்களில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது என்னுடைய மாணவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார். ஆனால் அவரிடம் நான் தான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். எங்களிடம் நிறைய ஒத்துப் போகக்கூடிய பொதுவான பிடித்த விஷயங்கள் இருந்தன. அவை அனைத்தைப் பற்றியும் பேரார்வத்துடன் தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதற்கான தேடல் அதிகமாக உள்ள மனிதர் அவர். அவர் ஒரு சிறந்த ‘வைல்ட் லைஃப்’ புகைப்படக் கலைஞர் ஆவார்.ஏற்கனவே நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் சார்பில் சிறந்த புகைப்பட கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அது தொடர்பான பயணம் மேற்கொண்ட போது தான் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. என்னுடைய ஒரு ஒரு செயல்களிலும் அவருடைய பங்களிப்பு எப்பொழுதும் இருந்துள்ளது. நாங்கள் IIFC உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்த பொழுது அவர் தடையேதும் இல்லாமல் இங்கே செயல்படுத்தலாம் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவருடைய தொடர் ஆர்வத்தை இங்கே காண்பித்துக் கொண்டே இருந்தார். இப்படி ஒரு பேருதவி எல்லாராலும் முடியாது, இப்படி இன்னொருவரின் கனவில் பேரார்வத்துடன் செயலாற்றுவது என்பது எல்லாராலும் முடியாது.எப்போதுமே உதவி கொண்டே இருக்கக்கூடிய மனநிலையில் உள்ளவர்களால் மட்டுமே முடியும். அவருடைய மறைவு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது, அவரது மறைவை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்த மாதிரியான காலகட்டங்களில் துணிச்சலாக எடுத்து வைக்கும் முன்னகர்வுகள் தான் நம்மையும் சமூகத்தையும் நம்மை விட்டு சென்றவர்களையும் நிலை நிறுத்தக் கூடியதாக இருக்கும்.
வெற்றி துரைசாமி நினைவாக IIFC சார்பாக முதல் திரைப்படம் எடுப்பவர்களுக்கும் ‘வைல்டு லைஃப்’ புகைப்பட கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். சிலரின் மறைவுதான் நம்மில் பாதியை எடுத்து சென்று விடும் அப்படி ஒரு மறைவுதான் திரு.வெற்றி துரைசாமியின் மறைவு” என்று தன் அஞ்சலியை நிறைவு செய்தார்.
குழு புகைப்படத்துடன் ‘நினைவு அஞ்சலி’ நிகழ்வு நிறைவுற்றது.