சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’ .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன.இவ்விழாவில் பல்வேறுபட்ட அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்
படத்தைப் பற்றி இயக்குநர் சியோன் ராஜா பேசும்போது,
“இந்தச் சமூக விரோதி படம் உண்மையில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை யார் உருவாக்குகிறார்கள்? என்பதை மக்களிடம் அடையாளப்படுத்தி வெளிக்காட்டும் முயற்சியாக உருவாகியுள்ளது.இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் தேவை என்ற நோக்கில் இந்தப் படம் உருவாகி உள்ளது. இங்கே இத்தனை அரசியல் ஆளுமைகள் வந்துள்ளது அந்த நோக்கத்திற்கு ஆதரவு தருவதற்காகத்தான் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேட்டபோது முதலில் மறுத்தவர், பாத்திரத்தைக் கேட்டதும் அரை மனதாக ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்பில் கேமராவை ஆன் செய்ததும் ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார். அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தயாரிப்பாளர் ராஜன் அவர்களைக் கேட்டபோது ஒரு காட்சியில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்றார். மூன்று காட்சிகள் என்றேன். கதையைக் கேட்ட பிறகு நடித்துக் கொடுத்ததுடன் சம்பளமே வாங்கவில்லை. அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
நாயகன் பிரஜின் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. கேரவான் இல்லாமல் படபிடிப்பு முடித்த நாயகன் அவர்தான்.அவர் மேலும் வளர்வார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் பேசப்படுவார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த குணாஜி பேசும்போது,
” இந்த நாட்டின் சமூக விரோதிகள் யார் தெரியுமா ?” என்று தொடங்கியவர் ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து நடிகர்களையும் குற்றம் சாட்டினார் .மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்காத இவர்கள் சமூக விரோதிகள் தான் என்று அவர் பேசியதைத் தொடர்ந்து நடிகர் சௌந்தரராஜா பேசினார். அப்போது “எதற்கெடுத்தாலும் திரைப்பட நடிகர்களைக் குற்றம் சாட்டுவதை முதலில் நிறுத்துங்கள். அவர்கள் மக்களை மகிழ்ச்சியூட்டுவதற்காகப் படங்களில் நடிக்கிறார்கள். சம்பளம் பெறுகிறார்கள். எதற்கெடுத்தாலும் ஏன் அவர்களை உள்ளே இழுத்துக் கொண்டு வருகிறீர்கள்?” என்றார்.
அதன் பிறகு இந்த நிகழ்ச்சி வாதப்பிரதிவாதங்களால் வெப்பமடைந்து பரபரப்பாகி சூடேறியது.
“நான் குமரி மண்ணில் இருந்து சென்னைக்கு இந்தப் படத்தை வாழ்த்துவதற்காக வந்தேன்.படத்தின் இயக்குநர் சியோன் ராஜா நிறைய வாசிக்கிறவன், அது மட்டும் அல்ல நிறைய யோசிக்கிறவன். இன்று சாதாரண உப்புக்கல்லாகத் தெரிகிற சியோன் ராஜா இந்தப் படத்திற்குப் பின் வைரமாக மாறுவான்.இங்கே ஒருவர் அறச்சீற்றத்தை வெளிப்படுத்திப் பேசினார்.பொதுவெளியில் பேசும்போது யார் மனமும் புண்படாத வகையில் பேசுவது நாகரிகம் ஆகும். சமூக விரோதி எங்கிருக்கிறான்? நம்மிடையே தான் இருக்கிறான்.இங்கே தீவிரவாதிகள் சமூக விரோதிகள் என்பதற்கு வேறு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன.மாவோ என்றாலே இங்கே அஞ்சுகிறார்கள் .அவன் யார் என்பதைப் பற்றி யாருக்கும் அரசியல் அறிவு கிடையாது. வரலாற்றினைப் படித்தது கிடையாது. அவன் மக்களுக்காக 6000 மைல் பயணம் சென்றவன். லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் படை திரட்டியவன் மாவோ.அவன் யுத்தம் செய்தது சர்வாதிகார சாம்ராஜ்யத்திற்கு எதிராக மட்டுமல்ல போதை கலாச்சாரத்துக்கு எதிராகவும்தான். அபின் நிறைந்த கப்பலைக் கொளுத்தி அழித்து மக்களைத் தீய பழக்கத்திலிருந்து காத்தவன்..அதனால்தான் வரலாற்றில் அது அபினியுத்தம் எனப்படுகிறது.மாவோ பெயர் என்றாலே தீவிரவாதியாகப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் அவர்களின் புரிதல் இருக்கிறது.
இந்தப் படத்திற்காக இயக்குநர் சீயோன் ராஜாவும் கதாநாயகன் பிரஜினும் பட்ட பாடுகளை நான் அறிவேன். அவர்களின் தொடர் ஓட்டத்தை நான் கவனித்து இருக்கிறேன். அது ஒரு சிலுவைப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் டிஜிபி மோகன்தாஸ் காவல்துறைக்கு சங்கம் வைக்க வேண்டும் என்று கூறினார். அதற்காகக் காவல்துறையினர் போராடினார்கள் அவர்களை ஒடுக்குவதற்கு எம்.ஜி.ஆர் ராணுவத்தை வரவழைத்துப் பயன்படுத்தினார் .போராடியவர்கள் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்கள் .குற்றம் சம்பந்தமான புலனாய்வு அறிக்கையில் மற்ற மாதங்களை விட காவல்துறையினர் சிறையில் இருந்த அந்த ஒரு மாதம் தான் கொலை , கொள்ளை குற்றங்கள் நடக்காமல் குறைவாக இருந்தது.
இமான் அண்ணாச்சி பேசும்போது,
” இன்று ஒரு படம் வெற்றியடைய வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி இருக்க வேண்டும்,இன்னொன்று கெட்ட வார்த்தைகள் பேச வேண்டும். அது இரண்டுமே இதில் உள்ளது. எனவே இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசும்போது,
இந்தப் படம் சமுதாயத்திற்கு எதிரான சமூக விரோதிகள் பற்றிய மக்களிடம் எடுத்துக் கூறும் படமாக இருக்கும் என்று நான் புரிந்து கொள்கிறேன்.இன்று போதைக் கலாச்சாரத்தை பரப்பி மக்களைத் தவணை முறையில் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமநிலை சமுதாய நோக்கமாக இம் முயற்சிகளுக்கு எங்களது ஆதரவு என்றும் உண்டு. . இந்த முயற்சியில் வெற்றி பெற இயக்குநரை வாழ்த்துகிறேன் “என்றார்.
“முதலில் நான் இந்தப் படத்தின் தலைப்பைப் பாராட்டுகிறேன் அருமையான தலைப்பு .நான் சுற்றுப் பயணத்திலிருந்து வந்திருக்கிறேன். நாலைந்து நாட்களாகத் தூக்கம் இல்லை. இந்த முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்று நான் வந்துள்ளேன். பாலச்சந்தர் தண்ணீர் தண்ணீர் என்று ஒரு படமெடுத்துக் குடிநீர்ப் பிரச்சினையைச் சமூகப் பிரச்சினையாக மக்களிடம் பேச வைத்தார்.படமும் பெரிய வெற்றி பெற்றது.நம் நாட்டில் அசந்தால் தேசவிரோதி என்பார்கள்.தேசத்தைப் பற்றிக் கவலைப்படுபவனைத் தேச விரோதி என்பார்கள்.சமூகத்தைப் பற்றி கவலைப்படுபவனைச் சமூக விரோதி என்பார்கள்.இனிமேல் தேசவிரோதி என்றுதான் படம் எடுக்க வேண்டும் .
பத்திரிகை போல சினிமாவிற்கும் அதிகமான சமூகப் பொறுப்பு உண்டு.எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. முன்பெல்லாம் என்னைக் கல்லூரிகளுக்குப் பேச அழைப்பார்கள். இப்போது அழைப்பதில்லை.கல்லூரிகளில் அரசியல் அறிவியல் பாடமாக உள்ளது. ஆனால் அரசியல்வாதிகளை அழைக்கமாட்டார்கள்.
” நான் இத்தனை படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படம் எனக்கு சிறப்பான படம் என்று எனது உள்ளுணர்வு சொன்னது. இந்தப் படம் வெற்றிபெறும் , இந்தப் படம் இறங்கி அடிக்கும் என்று என் மனதிற்குப் பட்டது.
ஒரு படம் முயற்சி சரிவர அமையவில்லை என்றால் அந்த இயக்குநர் சிறிது காலம் முயற்சி செய்து விட்டு அடுத்த வேலைக்குச் சென்று விடுவார். ஆனால் இந்த இயக்குநர் இந்தப் படத்திற்காகத் தனது சொத்தை அடமானம் வைத்துள்ளார். இந்தப் படத்திற்காக நான்கு பேர் உதவி இருக்கிறார்கள். அந்த நாலு பேர் இல்லை என்றால் இந்தப் படம் இந்த நிகழ்ச்சி எதுவுமே சாத்தியப்பட்டு இருக்காது .நான் ஒரு வளர்ந்து வரும் நடிகர். வளர்ந்து வந்தோம் என்றால் யாரையும் அழைக்கும் போது போனைக் கூட எடுக்க மாட்டார்கள் .அப்படி இருந்தும் எனது நண்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். எனக்கு நண்பர்களும் குடும்பமும் பக்கபலமாக இருக்கிறது. அப்படிப் பக்கபலமாக உள்ளவர்கள் தோற்றதாகச் சரித்திரம் இல்லை.இந்தப் படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறேன் “என்றார்.
கலைஞர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும். சார்லி சாப்ளின் உலக சர்வாதிகாரி ஹிட்லரை பார்த்து உலகமே பயந்து கொண்டிருந்தபோது டிக்டேட்டர் படத்தில் அவரை நகைச்சுவைக்குரிய கேலிக்குரியவராகக் காட்டி அவர் பிம்பத்தை உடைத்தார். இப்படிக் கலைஞர்கள் சமூக மனசாட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே ரஜினி மக்கள் பிரச்சினைக்குக் குரல் கொடுக்கவில்லை என்று கேட்கும் போது அவர் பதில் தரலாம், மறுக்கலாம். அது அவர் மனசாட்சிக்கு உட்பட்டது. ஆனால் சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் அவர் குரல் கொடுத்து அதைத் திசை திருப்பி தன்னுடைய ரசிகர்களைத் தவறான பாதையில் செல்ல வழி வகுக்கக் கூடாது. ஸ்டெர்லைட் பிரச்சினையில்
ரஜினி அப்படிச் செய்திருக்கக் கூடாது.
அவர் ஒரு பெரிய கதாநாயகனாக இருக்கிறார். படங்களில் அவர் உடுத்துகிற உடைகளை ரசிகர்கள் உடுத்துகிறார்கள். அவர் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்துகிறார்கள் .அப்படிப் பின்பற்றுபவர்கள் இருக்கும்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று கூறியது எவ்வளவு தவறானது .எதற்கும் குரல் கொடுக்காதவர் அப்படிப் பேசும்போது கோபம் வரத்தான் செய்யும்.
அரசியலற்று இருங்கள் அமைதியாக இருங்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 15 ஆயிரம் பேரை என்கவுண்டர் மூலம் கொலை செய்த யோகி ஆதித்யநாத் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் காலில் விழும்போது, நாங்கள் கேள்வி கேட்கத்தான் செய்வோம். சமூக விரோதி காலில் ரஜினிகாந்த் விழும்போது அதை நாங்கள் கேள்வி கேட்போம் .சமூக விரோதியை அவர் ஆதரிப்பதாகவே எடுத்துக் கொள்வோம். நான் மூன்று ஆண்டுகள் ஐநா சபையில் உரையாற்றினேன். மீண்டும் செல்வதற்கு அங்கே அனுமதி உண்டு .ஆனால் 5 ஆண்டுகளுக்கு எனது பாஸ்போர்ட்டை முடக்கி விட்டார்கள் .