இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக வெளியான “லேபில்” சீரிஸில், புதுமுக நடிகர் ஹரிஷங்கர் அனைவரையும் ஈர்த்துள்ளார். கிரிக்கெட்டராக ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்தவர் தற்போது, நடிகராகக் கலக்கி வருகிறார்.


படிக்கும் காலத்திலிருந்தே நடிப்பு மீது எனக்கு தீராத ஆர்வம் இருந்தது. விளையாட்டில் சிறப்பாகச் செயல்பட்டதால் அதில் கிடைத்த வாய்ப்புகளை முழுக்க பயன்படுத்திக் கொண்டேன். கிரிக்கெட் நம் எதிர்காலம் இல்லை, அனலிஸ்டாக எனக்கு சரியான சப்போர்ட் கிடைக்கவில்லை, என்று உணர்ந்த போது, உடனடியாக என் ஆர்வம் முழுவதையும் திரைத்துறை பக்கம் செலுத்தினேன். ஸ்போர்ட்ஸில் எனக்கு கிடைக்காத ஆதரவு திரைத்துறையிலிருந்து முழுதாக கிடைத்தது. தொலைக்காட்சியில் என் நடிப்பை ஆரம்பித்தாலும், சினிமா என் கனவாக இருந்தது. லேபில் சீரிஸ் என் கனவை நனவாக்கியுள்ளது. கிரிக்கெட் மூலம் அறிமுகமான நண்பர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் என் ஆர்வத்தைப் பார்த்து லேபில் சீரிஸில் வாய்ப்புத் தந்தார். சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்குப் பிறகு, லேபில் சீரிஸ் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தயாரிப்பாளர் பிரபாகரன் அவர்கள் ஆரம்பம் முதலே எனக்குப் பெரிதும் ஊக்கம் தந்தார். இப்போது சீரிஸ் பார்த்து விட்டு அனைவரும் பாராட்டுவது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் நான் நடித்த காட்சிகளை தனித்தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இப்போது பலரிடமிருந்து பாராட்டுகளோடு, வாய்ப்புகளும் வருகிறது. அடுத்ததாக நல்ல கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிகராக பாராட்டுக்கள் பெற வேண்டும், வித்தியாசமான வில்லன் வேடங்களில் கலக்க வேண்டும், அதை நோக்கியே என் பயணம் இருக்கும்.