நாயகன் விக்ரம் பிரபு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் ஊரில் இருக்கும் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். அப்படி தாதாவாக இருக்கும் வேலு பிரபாகரன் மற்றும் அவரிடம் பணியாற்றி விலகி ரவுடுசம் செய்து வரும் ரிஷி மற்றும் சவுந்தரராஜாவிடம் விக்ரம் பிரபு மோதுகிறார்.
இதில் ரிஷியின் தம்பி டேனியலை விக்ரம் பிரபு அவமானப் படுத்தி என்கவுண்டர் செய்கிறார். இதனால் கோபம் அடையும் ரிஷி மற்றும் சவுந்தர ராஜா, விக்ரம் பிரபு மற்றும் அவரது காதலி ஶ்ரீ திவ்யாவை கொலை செய்து விடுகிறார்.இதில் உயிர் தப்பிக்கும் விக்ரம் பிரபு, தன் காதலியை கொன்ற ரவுடி ரிஷி மற்றும் சவுந்தரராஜாவை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக படம் முழுக்க வலம் வருகிறார். ஶ்ரீ திவ்யாவுடன் காதல் காட்சிகளில் ஆங்காங்கே கவர்ந்து இருக்கிறார். நாயகியாக வரும் ஶ்ரீ திவ்யாவுக்கு அதிகம் வேலை இல்லை. விக்ரம் பிரபுவுடன் காதல், பாடல் காட்சிகளில் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்.வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் இருக்கிறார் ரிஷி. தம்பிக்காக பழி வாங்க துடிக்கும் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டையில் வால் சுற்றும் காட்சியில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். இவருக்கு துணையாக போட்டி போட்டு நடித்து இருக்கிறார் சவுந்தரராஜா. காதலிடம் காதலை சொல்லாமல் நடித்த காட்சிகளில் அருமை.
போலீஸ், ரவுடிசம், கொலை, என்கவுண்டர் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்தி. பழைய கதை என்றால் அதில் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அது பெரியதாக எடுபடவில்லை. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார். கதிரவனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.