நந்திவர்மன் – விமர்சனம்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன் கட்டிய மாபெரும் கோவில் ஒன்று அனுமந்தபுரம் என்னும் கிராமத்தில் மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது. அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவி, போஸ் வெங்கட் தலைமையில் மாணவர் குழு ஒன்றை ஆய்வு மேற்கொள்ள அங்கு அனுப்புகிறார்.

ஆனால், கிராம மக்கள் ஆய்வு நடத்த மறுக்கிறார்கள். பிறகு மக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் போஸ் வெங்கட் குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்படுவதோடு, ஆய்வு குழுவில் இருந்த மாணவர் ஒருவரும் கொல்லப்படுகிறார்.

இந்த கொலைகள் பற்றி விசாரிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாயகன் சுரேஷ் ரவி, அந்த ஊரில் நடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

இறுதியில் சுரேஷ் ரவி, ஊரில் நடக்கும் கொலைகளை கண்டுபிடித்தாரா? நந்திவர்மன் கட்டிய கோவிலையும், புதையலையும் கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். காதல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் யதார்த்தமாக நடித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷுக்கு அதிகம் வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

போஸ் வெங்கட்டின் கதாபாத்திரமும் அவரது அனுபவ நடிப்பும் படத்திற்கு பெரிய பலம். நிழல்கள் ரவி மற்றும் கஜராஜ் ஆகியோரின் நடிப்பு சிறப்பு.புதையல், அதை சுற்றி நடக்கும் மர்மம், அமானுஷ்யம், கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பெருமாள் வரதன். புதையல் கதையை வைத்து பல படங்கள் வெளியாகி இருந்தாலும், இப்படம் முற்றிலும் மாறுபட்டதாக உருவாக்கி இருக்கிறார்கள். நந்திவர்மன் பற்றி சொல்லும் பிளாஷ்பேக் காட்சி ரசிக்க வைக்கிறது. ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை.

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து சாதாரண இடங்களை கூட அழகாக காண்பித்து இருக்கிறார். ஜெரால்டு பிலிக்ஸ் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top